மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து நேற்று ஓய்வு அறிவித்தார். சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.
இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். இந்தியாவில் நடைபெற்ற பல டெஸ்ட் தொடர்களில் அணிக்கு தனி ஆளாக போராடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கருக்கு நிகராக அஸ்வினும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட அஸ்வினுக்கு தாமாக இருந்தால் வழியனுப்பும் போட்டியை நடத்தி மரியாதையுடன் விடைபெற வழி வகுத்திருப்பேன் என்று கபில்தேவ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- “இந்தியாவின் மகத்தான ஒருவர் விடைபெற முடிவெடுத்ததை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். அவருடைய முகத்தில் வலியை பார்த்தது சோகம். சச்சின் டெண்டுல்கர் அல்லது சுனில் கவாஸ்கரின் தரத்திற்கு நெருக்கமாக ஒருவர் வருவார் என்று நாங்கள் எப்போதும் நினைத்ததில்லை. அப்படிப்பட்ட அஸ்வின் இங்கிருந்து சென்றுள்ளார்.
நான் அங்கே இருந்திருக்க விரும்புகிறேன். அங்கே இருந்திருந்தால் அவரை நான் இப்படி செல்ல விட்டிருக்க மாட்டேன். அவரை நான் நிறைய மரியாதை மற்றும் மகிழ்ச்சியுடன் அனுப்பியிருப்பேன். அதற்கு அவர் தகுதியானவர். அவருடைய மிகப்பெரிய பங்களிப்பை யாரும் நிரப்ப முடியாது” என்று கூறினார்.