“என் பெயரை ஏன் சொல்லவில்லை?'' – அமித் ஷா கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மோதல்!

அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற ஊர்களில் காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மாலை நடைபெற்றது. பெரியார் சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அம்பேத்கர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மோதல்

பேராவூரணி தி.மு.க எம்.எல்.ஏ அசோக்குமார் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அசோக்குமாரின் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் மஜீத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளின் பெயர்களை மைக்கில் சொல்லி வரவேற்றார். இதில் பேரூர் நகரச் செயலாளர் சேகர் பெயரை அவர் குறிப்பிடவில்லை என சொல்லப்படுகிறது.

இதையடுத்து சேகர், `என் பெயரை ஏன் சொல்லவில்லை’ என கேட்ட போது மஜீத், சேகரை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் இதனால் இருவருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பேராவூரணி தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தி.மு.க தரப்பை சேர்ந்த சிலரிடம் பேசினோம், “பேராவூரணி நகரப்பகுதியில் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை பேரூராட்சி சேர்மன் சாந்தியின் கணவரான நகரச் செயலாளர் சேகர் செய்திருந்தார். பொதுக்குழு உறுப்பினரான மஜீத் பேராவூரணியில் கட்சி சார்பாக எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அவர் மைக்கை பிடித்து பேசுவது வழக்கம். அது போல் இந்த கண்ட ஆர்ப்பாட்டத்திலும் பேசினார். கட்சி நிர்வாகிகள் பெயரை ஒவ்வொன்றாகச் சொன்னார்.

திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆனால், சேகர் பெயரை மட்டும் சொல்லவில்லை. உடனே சேகர், ஏன் என் பெயரை சொல்லவில்லைனு கேட்டார். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து மஜீத், சேகரை தகாத வார்த்தைகளில் திட்டி விட்டார். பதிலுக்கு சேகரும் பேச இருவருக்கும் கட்சியினர் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, நிர்வாகிகள் இருவரையும் விளக்கி விட்டனர். பொது வெளியில் பலர் கூடியுள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அசோக்குமார் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர் இருந்திருந்தால் இது போல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

இதே போல், தொகுதி பொறுப்பாளர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போதும் மஜீத், இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் பெயரை சொல்லவில்லை. இதனால் அப்போதும் சல சலப்பு ஏற்பட்டு பிரச்னையாகாமல் அடங்கியது. மஜீத் தொடச்சியாக இது போல் நடந்து கொள்கிறார். தனக்கு பிடிக்காதவர்களின் பெயரை சொல்வதில்லை. அசோக்குமார் எம்.எல்.ஏவும் தன்னுடன் மஜீத் இருப்பதால் அவரது செயலை கண்டு கொள்வதில்லை. அதனால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. அதுவே தற்போது ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அளவிற்கு வந்திருக்கிறது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.