விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக சத்துணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரிவுபடுத்தப்பட்ட சத்துணவு திட்டத்தின் படி, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், அரசுப் பள்ளிகளில் சத்துணவுத்திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? சத்துணவு பொருள்கள் இருப்பு உள்ளதா? என்பதை அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர். அதன்படி, ராஜபாளையம் சத்திரப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆய்வு செய்தார்.
அப்போது சத்துணவு மையம் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் கணபதி, சமையலர் குருலட்சுமி, சமையல் உதவியாளர் அம்சவள்ளி ஆகியோர் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பணி நேரத்தில் பணியில் இல்லை என்பதும் ஆய்வின் போது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பேரில், சத்திரப்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தின் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட மூவரையும் பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.