கோயில் – மசூதி விவகாரங்களுக்கு இனி இடமில்லை: இந்துத்துவா தலைவர்களுக்கு மோகன் பாகவத் கண்டிப்பு

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு இனி கோயில்-மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்பி இந்துக்களின் தலைவர்களாக முயற்சிப்பது தவறு என்றும் அவர் கண்டித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் சம்பலின் ஜமா மசூதி வழக்கை தொடர்ந்து பல இடங்களில் கோயில்-மசூதி விவகாரங்கள் கிளம்பி வருகின்றன. ராஜஸ்தானின் அஜ்மீரிலுள்ள காஜா ஷெரீப் தர்கா உள்ளிட்ட பல முஸ்லிம் தலங்கள் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களில் கோயில்கள் இடித்துக் கட்டப்பட்டிருப்பதாக சில இந்துத்துவா அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்குகளால் இந்து – முஸ்லிம் நல்லுறவில் பாதிப்புகள் உருவாகும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்துத்துவாவின் தலைமை அமைப்பாகக் கருதப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர் மோகன் பாகவத் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இதில் அவர், நாட்டில் இனி கோயில் – மசூதி விவகாரங்களுக்கு இடமில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பல இந்துத்துவா மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் தன் கண்டிப்பை தெரிவித்தார்.

அவர் ’விஷ்வ குரு’ எனும் தலைப்பில் நிகழ்த்திய உரையில் தெரிவித்திருப்பதாவது: ராமகிருஷ்ணா மிஷனில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாம் இந்துக்கள் என்பதால் இதை நம்மால் மட்டுமே நடத்த முடியும். பல காலமாக நாம் மதநல்லிணக்கத்துடன் வாழ்கிறோம். இதையே நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனில் அதற்கான முன் உதாரணமாக நடப்பது அவசியம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு சில தலைவர்கள் அதேபோன்ற விவகாரங்களை புதிய இடங்களில் பேசி வருகின்றனர். இதன்மூலம், இந்துக்களின் தலைவர்களாக வர அவர்கள் முயற்சிப்பது ஏற்புடையது அல்ல. இந்துக்களின் நம்பிக்கை என்பதால் ராமர் கோயில் கட்டப்பட்டது. தற்போது இது போன்ற பிரச்சினைகளை அன்றாடம் எழுப்புவதை எப்படி அனுமதிப்பது?

இந்த நிலையை தொடர முடியாது. நாம் அனைவரும் இங்கு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை இந்தியா காட்ட வேண்டியுள்ளது. சிலர் பழங்கால நிலை மீண்டும் வர விரும்புகின்றனர். நம் நாடு தன் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடைபெறுகிறது. இந்தமுறையில், ஆட்சியாளர்களை பொதுமக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். மேலாதிக்கக் காலங்கள் மறைந்து விட்டன. இதுபோன்ற மேலாதிக்கத்தை முகலாய மன்னர் அவுரங்கசீப் கடைப்பிடித்தார். எனினும், அவரது வம்சத்தவரான கடைசி மன்னர் பஹதூர் ஷா ஜபர், பசுவதையை தடை செய்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் இந்துக்களிடம் ஒப்படைக்க முடிவானது. ஆனால், இதை தவிர்த்து ஆங்கிலேயர்கள் இந்து-முஸ்லிம்கள் இடையே பிரச்சினையை உருவாக்கினர்.அப்போது முதல் சமூகத் தனித்துவப் பழக்கம் அமலில் வந்ததும், இதன் விளைவாகவே நம் நாடு பிரிந்து, பாகிஸ்தான் எனும் தனி நாடு உருவாக்கப்பட்டது. நாம் அனைவருமே இந்தியர்கள் எனக் கருதும் போது ’மொழிகளின் ஆதிக்கம்’ ஏன்? சட்டத்தின் முன்பாக யாரும் மெஜாரிட்டி, மைனாரிட்டி என்றில்லை.நம் நாட்டில் ஒவ்வொருவரும் அவரவர் மதநம்பிக்கைகளை பின்பற்றுவது நமது கலாச்சாரம். சட்டங்களை பின்பற்றி மதநல்லிணக்கத்துடன் வாழ்வதே தற்போதைய அவசியம் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.