எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் வலியுறுத்தல்

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இன்று (டிச.20) நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் சென்னை, எர்ணாவூரில் இன்று (டிச.20) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில், திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கர், இணை சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேகவ மூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், அனல்மின் திட்ட விரிவாக்கம் தொடர்பாக மின்வாரிய பொறியாளர்கள் விளக்கியதாவது:

எண்ணூர் அனல்மின் நிலைய வளாகத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான அதிநவீன தொழில்நுட்ப திறன் கொண்ட எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் ரூ.5 ஆயிரத்து 421 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் நிலக்கரி கையாளப்பட உள்ளது. இத்திட்டத்தில் நிலக்கரி எரியும் கொதிகலன், நீராவி விசையால் இயங்கும் ஜெனரேட்டர், 275 மீட்டர் உயரம் உள்ள புகைப்போக்கி உள்ளிட்டவை நிறுவப்பட உள்ளன. இதுபோன்ற அனல் மின் நிலையத்தை கடலோரப் பகுதியில் அமைப்பதன் மூலம் உற்பத்தி செலவு குறையும். நிலக்கரியை எளிதாக கையாள முடியும். நிலக்கரி, கடலில் இருந்து நேரடியாக தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும். இதனால் காற்று மாசு ஏற்படுவது தடுக்கப்படும். பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியும்.

இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. இந்த வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துக்காக ரூ.977 கோடி செலவு செய்யப்பட உள்ளது. இத்திட்டம் கொண்டுவரப்பட்டால் தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். இவ்வாறு அதிகாரிகள் விளக்கினர்.

பின்னர் இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க அழைத்தனர். உள்ளூர் பகுதி மக்கள் பலர் பேசும்போது, “இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும். எண்ணூர் பகுதியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதனால் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதே நேரத்தில் இந்த திட்டத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளையும் உள்ளூர் பகுதி மக்களுக்கே வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மீனவர்ளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது” என்றனர்.

சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வந்து திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தோருக்கு உள்ளூர் மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளூர் மக்கள் சிலர் பேசும்போது, “இவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவது ஏமாற்று வேலை. கடை நிலை வேலை வாய்ப்பு மட்டுமே உள்ளூர்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. சாம்பல் கழிவை ஆற்றில் கொட்டாமல் இவர்களால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது. இதுநாள் வரை காற்றுமாசுவை தடுக்காதவர்கள், இனிமேல் தடுப்பார்கள் என இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. 2019-ல் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் இப்போது கருத்து கேட்பது தவறு. இத்திட்டத்தை செயல்படுத்தவே கூடாது” என்றனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை சொல்லியே திட்டத்தை செயல்படுத்துவோம் என்கின்றனர். இத்திட்டத்தால் நீர் மாசும், காற்று மாசும் ஏற்படும். அதன் பிறகு, இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்கள். வேலையும், பொருளாதார வளர்ச்சியும் முக்கியம் என்றால், தொழிற்சாலையில் அருகில் சென்று வீடு கட்டி வாழுங்கள். இத்திட்டம் இப்பகுதிக்கு தேவையில்லை. ராஜஸ்தான் பாலைவானத்தில் சோலார் பலகைகளை வைத்தோ, கடலில் காற்றாலைகளை அமைத்தோ மின்சாரம் தயாரிக்காமல், விளைநிலங்களை பறித்து மின் திட்டங்களை செயல்படுத்த துடிப்பது ஏன்? சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல திட்டங்கள் இருந்தும், சுவாச காற்றை நஞ்சாக்கும் அனல் மின் நிலையம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு நினைப்பது எதற்கு? என அவர் கேள்வி எழுப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.