திருமலையில் அரசியல் பேசினால் நடவடிக்கை: அறங்காவலர் பிஆர் நாயுடு மீண்டும் எச்சரிக்கை

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் இடம் பெற்றுள்ள திருமலையில் அரசியல் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தடையை மீறி அரசியல் பேசிய தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பிஆர் நாயுடு எச்சரித்துள்ளார்.

இந்துக்களின் புனித திருத்தலமான திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். இதனால் இந்த திருத்தலம் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. ஆதலால், இங்கு எதை செய்தாலும் அது உடனடியாக நாடு முழுவதும் பிரபலம் அடைந்து விடுகிறது. இதனை சில அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதனை அறிந்த புதிய அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, தான் பதவியேற்ற முதல் அறங்காவலர் குழு கூட்டத்திலேயே இனி திருமலையில் யாரும் அரசியல் பேசக்கூடாது என்றும், அப்படி பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். இது தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஏழுமலையானை தரிசித்து விட்டு வெளியே வந்த பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த தெலங்கானா மாநில முன்னாள் அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுட் என்பவர், தெலங்கானா பக்தர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் உரிய மரியாதை வழங்குவதில்லை எனும் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும், இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். இது போன்ற பேச்சுக்கள் திருமலையில் பேசக்கூடாது என்பதால், ஸ்ரீநிவாஸ் கவுட் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு சமூக வலைதளம் மூலம் நேற்று மீண்டும் எச்சரித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.