வங்காளதேசத்தில் இந்துக்கள்- பிற சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் வன்முறைகள்.. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம்

புதுடெல்லி:

அண்டை நாடுகளில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்ளும் வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். சிறுபான்மை அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மூலம் பெறப்பட்ட தரவுகளை குறிப்பிட்டு அவர் அளித்த பதில் வருமாறு:-

வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக இந்த ஆண்டில் டிசம்பர் 8-ம் தேதி வரை 2,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் அக்டோபர் மாதம் வரை 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2022-ல் வங்காளதேசத்தில் 47 வழக்குகளும், பாகிஸ்தானில் 241 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு (2023) வங்காளதேசத்தில் 302 வழக்குகளும், பாகிஸ்தானில் 103 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

மத சகிப்பின்மை, மதவெறி வன்முறை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையின மக்களின் அவல நிலையை சர்வதேச அரங்கில் இந்தியா தொடர்ந்து எடுத்துரைக்கிறது.

பாகிஸ்தான், வங்காளதேசம் தவிர மற்ற அண்டை நாடுகளில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்பாக வழக்குகள் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.