Amazon Prime Video Device Limit Latest Updates: இந்தியாவில் ஓடிடி தளங்களில் பயன்பாடு, கரோனா காலகட்டத்திற்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது எனலாம். அதற்கு முன்னரே பல்வேறு ஓடிடி தளங்கள் இந்தியாவில் கால் பதித்துவிட்டன என்றாலும், இந்த காலகட்டத்தில்தான் பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் ஓடிடி தளங்களை நோக்கி நகர்ந்தனர். அதன்பின்னர், இந்தியாவில் ஓடிடி சந்தை விரிவடைந்தது.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, Sun NXT, SonyLiv, ஜியோ சினிமா ஆகியவை முன்னணி ஓடிடி நிறுவனங்களாக இந்தியாவில் வலம் வருகிறது. இதில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பயன்படுத்தப்படுகிறது எனலாம். பிராந்திய ரீதியில் பல்வேறு திரைப்படங்கள் இதில் ரிலீஸ் ஆகிறது, அதுமட்டுமின்றி அமேசான் பிரைம் சந்தா செலுத்தினால் அதன் ஷாப்பிங் தளத்திலும் உங்களுக்கு பல்வேறு ஆஃப்பர்கள் கிடைக்கும்.
புத்தாண்டில் கவலையளிக்கும் செய்தி
இந்நிலையில், தற்போது இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோவை பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு வரும் புத்தாண்டு 2025 ஜனவரி மாதத்தில் ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வருகிறது. இந்தியாவில் பரவலாக ஒரு சந்தாவை செலுத்தி, கணக்கு விவரங்கள், பாஸ்வேர்ட் ஆகியவற்றை பகிர்ந்துகொண்டு அதிகமானோர் ஒரே கணக்கை பயன்படுத்துவார்கள். அந்த வகையில், இனி அப்படி செய்ய முடியாது.
வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தின் டிவைஸ் லிமிட் குறைக்கப்படுகிறது. அதாவது, இனிமேல் ஒரே நேரத்தில் 5 டிவைஸ்களில் மட்டுமே ஒரு கணக்கை லாக்-இன் செய்ய முடியும். தற்போது 10 டிவைஸ்கள் வரை லாக்-இன் செய்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி, 5 டிவைஸ்களில் வெறும் 2 டிவி-களை மட்டுமே இணைக்க முடியும்.
அமேசான் பிரைம்: எவ்வளவு கட்டணம்?
நீங்கள் 2 டிவிகளில் ஒரு கணக்கை லாக்-இன் செய்து வைத்திருந்தால் அதற்கு மேல் டிவியில் லாக்-இன் செய்ய முடியாது. அடுத்து மூன்று மொபைல்களில் வேண்டுமானால் ஒரே கணக்கை லாக்-இன் செய்துகொள்ளலாம். இதன்மூலம், தரமான வீடியோ ஸ்ட்ரீமிங்கை வழங்க அமேசான் பிரைம் திட்டமிட்டுள்ளது எனலாம். மேலும் நீங்கள் 30 நாள்களுக்கு ஒருமுறை மட்டும் 2 டிவைஸ்களை நீக்கிவிட்டு வேறு 2 டிவைஸ்களை லாக்-இன் செய்துகொள்ளலாம். இனி அடிக்கடி டிவைஸ்களை நீக்கிவிட்டு, புதிய டிவைஸ்களை இணைக்க முடியாது.
அமேசான் பிரைம் டிவிக்களின் லாக்-இன் செய்ய கட்டுப்பாடுகள் விதித்தாலும் மொபைல், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றில் நீங்கள் லாக்-இன் செய்துகொள்ளலாம். அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவில் மாதாந்திர திட்டத்திற்கு 299 ரூபாயை வசூலிக்கிறது. காலாண்டிற்கு 599 ரூபாயையும், ஒரு வருடத்திற்கு 1499 ரூபாயையும் கட்டணமாக வசூலிக்கிறது. அமேசான் லைட் வெர்ஷன் ஒரு வருடத்திற்கு 799 ரூபாய் ஆகும். ஒரு வருடத்திற்கு பிரைம் ஷாப்பிங் எடிஷன் 399 ரூபாய் ஆகும்.
அமேசான் பிரைம் வீடியோவில் கங்குவா, வேட்டையன், பிளடி பெக்கர், SIR, போன்ற லேட்டஸ்ட் தமிழ் திரைப்படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. அதுமட்டமின்றி பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கணக்கான திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள், ஆவணப்படங்கள் ஆகியவை கொட்டிக்கிடக்கின்றன.