வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ்ஆலத்தூர், நாகல் கிராமம் சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் விட்டல் குமார் (47).
பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த விட்டல் குமார், கடந்த டிசம்பர் 16-ம் தேதி மாலை 5.30 மணியளவில் குடியாத்தம் – காட்பாடி சாலையிலுள்ள சென்னாங்குப்பம் சுடுகாடு அருகில் ரத்தக் காயங்களுடன் கிடந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட விட்டல் குமார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மேல்விஷாரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட விட்டல் குமார் அன்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைக்கப்படும்போது, பா.ஜ.க-வினர் ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு விட்டல் குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விட்டல் குமாரின் மனைவி ரேவதியும் தனது புகாரில் தெரியப்படுத்தியிருந்தார். விசாரணையில், விட்டல் குமாருக்கும், தி.மு.க-வைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டு என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரியவந்தது. ஊராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகள் மற்றும் ஊராட்சிக்குள் நிலவும் பிரச்னைகள் குறித்து அடிக்கடி மாவட்ட நிர்வாகத்திடம் விட்டல் குமார் புகார் தெரிவித்து வந்ததால் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுவிடம் இருந்து தொடர்ச்சியாக விட்டல் குமாருக்குக் கொலை மிரட்டல்களும் வந்திருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுவையும், அவரின் மகனும் ஊராட்சி செயலாளருமான தரணிகுமாரையும் போலீஸார் பிடித்து கஸ்டடியில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பா.ஜ.க பிரமுகர் விட்டல் குமார் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதும், இந்தக் கொலையில் இவர்கள்தான் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில்தான் விட்டல் குமாரின் கொலை வழக்குத் தொடர்பாக நாகல் கிராமத்தைச் சேர்ந்த கமல்ஹாசன், சந்தோஷ்குமார் என்கிற 2 இளைஞர்களும் நேற்றைய தினம் (டிச. 20) காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் மகனின் கார் ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலைக் குற்றம் தொடர்பாக சரண்டர் ஆன 2 பேரும் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டு மற்றும் அவரின் மகன் தரணிகுமாரையும் போலீஸார் இன்று (டிசம்பர் 21) கைது செய்திருக்கின்றனர். விட்டல் குமாரை இரும்பு ராடால் தாக்கிவிட்டு, விபத்தில் சிக்கியதைப்போல் சித்திரிக்க முயன்றதும் விசாரணையின் முடிவில் தெரியவந்திருக்கிறது.
இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, “தமிழகம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. தி.மு.க-வோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும், அதிகாரமும் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் தி.மு.க-வினர் குற்றம் செய்யும்போதும், காவல்துறை நடவடிக்கை எடுக்க, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது.
பா.ஜ.க-வினரின் உயிருக்கு ஆபத்து நிலவும் நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், தி.மு.க கட்சியின் ஒரு பிரிவைப் போல் காவல்துறையினர் செயல்படுவது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. காவல்துறையினரின் பணி, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதே தவிர, தி.மு.க-வினரின் அராஜகத்துக்குத் துணை நிற்பதல்ல. ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் மாறும். ஆனால், காவல்துறையின் கடமை மாறப்போவதில்லை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…