Allu Arjun: "அல்லு அர்ஜுன் செய்தது மனிதமற்றச் செயல்; இனி அதிரடி நடவடிக்கைதான்"-தெலங்கானா முதலமைச்சர்

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிச.4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் மனைவி ரேவதி உயிரிழந்த சம்பவமும், நடிகர் அல்லு அர்ஜுனின் கைதும் அடுத்தடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் மனைவி ரேவதி (39) உயிரிழந்ததை அடுத்து அவரச சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவரது 9 வயது மகன் தேஜாவும் மூளைச்சாவு பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் இருக்கிறார். இதற்கிடையில் இந்த வழக்கில் முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்தாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். கைதான அல்லு அர்ஜுன் இரவு சிறையில் இருந்துவிட்டு பிறகு மறுநாளே ஜாமீன் பெற்று வீடு திரும்பினார்.

இந்தச் சம்வவத்திற்குப் பிறகு நடிகர்கள் பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகப் பேசி, அவரை வீட்டில் நேரில் சென்று ஆறுதலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (டிச 21) இது குறித்துப் பேசியிருக்கும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “அல்லு அர்ஜுன் செய்தது மனிதத் தன்மையற்ற, பொறுப்பற்றச் செயல். சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும், அவர் அடுத்த நாள் படம் பார்க்க வந்துள்ளார். அதுவும் கார் ரூஃப் கதவு திறந்து ரோட் ஷோ காட்டிக்கொண்டு வருகிறார். கூட்ட நெரிசல் நடந்தப்பின்னர் ஏ.சி.பி அவரை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு முதலில் படம் முடிந்தவுடன் செல்வதாக கூறி மறுத்துவிட்டார். பிறகு டி.சி.பி அவரிடம் ‘நீங்கள் வெளியேறவில்லை என்றால் கூட்ட நெரிசலில் இரண்டு பேர் சிக்கி மோசமான உடல்நிலையில் இருப்பதற்காக கைது செய்யப்படுவீர்கள்’ என்று கூறியதும்தான் வெளியேறியுள்ளார். வெளியேறும்போது கூட மீண்டும் காரின் கூரை கதவில் இருந்து ரோட் ஷோ செய்கிறார். அவருக்குப் பாதுக்காப்பாக வந்த பவுன்ஸர்கள் அல்லு அர்ஜுனைப் பாதுகாக்க ரசிகர்கள் கூட்டத்தைத் தள்ளியுள்ளனர். கூட்ட நெரிசல் தள்ளு முள்ளுவில் ஒரு பெண் பலியானார், 9 வயது சிறுவன் கவலைக்கிடமாக கோமாவில் இருக்கிறார்.

இந்த வழக்கில் திரையரங்க உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் காவல்துறையில் ஆஜராகாததால் அவரை வீட்டில் கைது செய்யும் நிலை ஏற்பட்டது. அன்றே அவர் ஜாமீனும் பெற்று விட்டார். இரவு சில மணி நேரம் மட்டுமே சிறையில் இருந்துவிட்டு மறுநாள் காலையே வீடு திரும்பிவிட்டார். இது வழக்கமான சட்ட நடைமுறை. ஆனால், நடிகர்கள், பிரபலங்கள் பலர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். விபத்தில் கை, கால் போன மாதிரி வீட்டுக்குச் சென்று நலம் விசாரிக்கின்றனர்.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

ஆனால், எவருமே பாதிக்கப்பட்ட குடும்பத்தையோ, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவனையோ நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. அல்லு அர்ஜுன் கூட அதைச் செய்யவில்லை. இதுதான் உங்களின் மனிதமா? அல்லு அர்ஜுன் செய்தது மனிதத் தன்மையற்றச் செயல். அதற்காக அவர் வருந்த வேண்டும். இந்தச் சம்பவம் அவருக்கு மட்டுமல்ல உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும்” என்றார்.

மேலும், “இனி திரையரங்கில் ஸ்பெஷல் ஷோவிற்கு அரசு அனுமதி வழங்காது. அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்பது தடுக்கப்படும். திரைத்துறை விவகாரத்தில் சில ஒழுங்கு நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.