இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அடிக்கடி தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடிக்கடி எதிரி நாட்டு எல்லை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கமாகி வருகிறது.
இதனிடையே, கைபர் பக்துன்கவா மாகாணம் மகீன் எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரின் மீது தீவிரவாதிகள் நேற்று பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
30-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பின்னர் ராணுவ நிலைகளில் இருந்த வயர்லெஸ் கருவிகள், தொலைதொடர்புகொண்டு கருவிகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் தீவைத்து எரித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதக் குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர். தங்களது மூத்த கமாண்டர்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் இதைச் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.