புதுவை: "மார்ட்டின் குழுமத்துக்கு அரசியல் அடித்தளம்" – ஜான்குமார் மீதான திமுக புகாரும், பாஜக பதிலும்

சமீபத்தில் வீசிய ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதையடுத்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணங்களை அறிவித்தன. அதேபோல பா.ஜ.க எம்.எல்.ஏக்களில் ஒருவரான ஜான்குமார், லாட்டரி தொழிலில் தன்னுடைய குருவாக இருந்த மார்ட்டின், மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோரை புதுச்சேரிக்கு மழை நிவாரணம் வழங்க அழைத்து வந்தார்.

நிவாரணம் வழங்கும் விழா

இது ஒருபுறமிருக்க, கடந்த நவம்பர் 18-ம் தேதி காமராஜர் நகர் தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விழாவில் பேசிய எம்.எல்.ஏ ஜான்குமாரின் மகனும், எம்.எல்.ஏ-வுமான ரிச்சர்டு ஜான்குமார், “என் அப்பா ஜான்குமாரைவிட ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சார், காமராஜர் நகர் தொகுதியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார். தற்போது இருப்பதை விடப் பல மடங்கு மக்கள் பணிகளைச் செய்வார்” என்று பேசினார்.

அதன்மூலம் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி அரசியலில் களமிறங்கப் போவதாகத் தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் பகுதி மக்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் இருக்கிறது மார்ட்டின் குழுமம். தற்போது காமராஜர் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஜான்குமார், முதலியார்பேட்டை தொகுதியில் தன்னுடைய அறக்கட்டளை அலுவலகத்தைத் திறந்து மழை நிவாரணங்களை அளித்து வருகிறார்.

புதுச்சேரி அரசு

அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், “அன்பார்ந்த முதலியார்பேட்டை தொகுதி மக்களுக்கு வணக்கம். நான் ஜான்குமார் பேசுகிறேன். ஓட்டு நமக்கு முதலியார்பேட்டை தொகுதியில் இருக்கும். ஆனால் ரேஷன் கார்டு நெல்லித்தோப்பு அல்லது காமராஜர் நகர் அல்லது வேறு தொகுதிகளில் இருக்கலாம். இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் கூட நீங்கள் இருக்கலாம்.

ஆனால் ஓட்டு முதலியார்பேட்டையிலிருந்தால், எங்கள் அலுவலகத்தில் பதிந்து, டோக்கன் போட்டு நிவாரணம் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு மற்றும் ஓட்டர் ஐ.டி-யை வைத்து நீங்கள் நிவாரணத்தை வாங்கிக் கொள்ளலாம்” என்று பேசியிருந்தார்.

அதேபோல அவர் வெளியிட்ட வாட்ஸ்-அப் செய்திக் குறிப்பில், “ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட முதலியார்பேட்டை தொகுதியைச் சார்ந்த மக்களுக்குச் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டை

நீங்கள் வரும்போது குடும்பத்தில் உள்ளவர்களின் தனித்தனி வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் அட்டை போன்றவற்றின் ஒர்ஜினர், அதற்கான ஜெராக்ஸ் மற்றும் ஒவ்வொருவருக்கான போட்டோ, செல்போன் நம்பர் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வர வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலும், ஆடியோவும்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனைச் சந்தித்த தி.மு.க மகளிரணியினர், “புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றாலும், தனிப்பட்ட தரவுகளின் அங்கீகரிக்கப்படாத சேகரிப்பானது தனியுரிமை அச்சுறுத்தலை எழுப்புகிறது. 

ஆட்சியர் குலோத்துங்கனிடம் புகார் கொடுக்கும் திமுக மகளிரணியினர்

இத்தகைய நடைமுறைகள் பிரிவு 66C இன் கீழ் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (ஐ.டி சட்டம்) மற்றும் பிரிவு 29 இன் கீழ் ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு வழங்குதல்) சட்டம், 2016 ஆகியவற்றின் விதிகளை மீறும் செயலாகும். அதனால் இந்த தனிநபர் தகவல்கள் சேகரிப்பு நடைமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை உறுதி செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனு அளித்திருக்கின்றனர்.

புதுச்சேரி தி.மு.க-வின் மாநில மகளிரணி தலைவர் காயத்ரி ஸ்ரீகாந்திடம் பேசினோம். “புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை வெள்ள நிவாரணம் வழங்குகிறேன் என்ற பெயரில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார், மார்ட்டின் குழுமத்துக்கு அரசியல் அடித்தளம் அமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு வாரமாக முதலியார்பேட்டை தொகுதி மக்களிடம் தனிநபர் தகவல்களைச் சேகரிக்கும் வேலையைத் துவங்கியிருக்கிறார்.

புதுச்சேரி தி.மு.க மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த்

நிவாரணம் யார் வேண்டுமானாலும் வழங்கலாம். ஆனால் அரசாங்க ஆவணங்களான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, போட்டோ, மொபைல் எண் கொடுத்தால் மட்டு்மே, நிவாரணம் பெற்றுக் கொள்ள முடியும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியிலுள்ள அனைத்து வாக்காளர்களின் செல்போன்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தை முன்னெடுத்தது பா.ஜ.க.

பா.ஜ.க-வின் அறிமுகமே இல்லாத பல்லாயிரம் புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் அவர்களுக்குக் கிடைத்தது எப்படி என்ற கேள்வியை முன்வைத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 2026 தேர்தலுக்கு முதலியார்பேட்டை தொகுதி மக்களை விலைபேசும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எம்.எல்.ஏ ஜான்குமார். புதுச்சேரியில் பெருகி வரும் சைபர் குற்றங்களுக்கு முதல் காரணம் தனிநபர் தகவல்களின் திருட்டு என்பதையும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து அரங்கேறும் நாடகத்தின் முதல் காட்சி இது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் எம்.எல்.ஏ ஜான்குமார்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எம்.எல்.ஏ ஜான்குமாரிடம் பேசியபோது, “ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் நிவாரணம் வழங்குகிறோம் என்றாலும், சிலர் திரும்பத் திரும்ப வந்து வாங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைக் கேட்டோம். முன்பு நான் தி.மு.க-வில் இருந்தபோதும் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்துத்தானே உதவிகள் செய்தேன்? அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது தி.மு.க பொங்குவதன் நோக்கம், மக்களுக்கு நாங்கள் உதவி செய்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதுதான்” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.