உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறள், பைபிளுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இரண்டடியில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு குறளும் நாடு, மொழி, இனம் என்று எல்லா எல்லைகளையும் கடந்து, உலகளாவிய அளவில் வசிக்கும் மானுடர்களுக்கு வேண்டிய படிப்பினையைக் கொண்டிருக்கிறது என்பது தான் அதற்குக் காரணம். இப்படி, பல சிறப்புகளைக் கொண்ட திருக்குறளை எழுதிய வள்ளுவருக்குக் குமரி முனையில் வானுயர சிலை அமைத்தது தமிழக அரசு.
அந்த சிலை அமைக்கப்பட்டு வெள்ளிவிழா காணும் நேரத்திலும், திருக்குறளின் மேன்மையை இப்போதைய மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களை வைத்து 1330 குறள்களையும் பனை ஓலையில் எழுத வைத்து, கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள தொட்டியப்பட்டி என்ற ஊரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்தான் இத்தகைய முயற்சி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தியிடம் பேசினோம்.
“தமிழக அரசு திருவள்ளுவருக்குச் சிலை அமைத்த 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி வெள்ளி விழாவைக் கொண்டாட உள்ளது. எங்கள் பள்ளியில் திருக்குறளின் சிறப்புகளை எல்லா நேரங்களிலும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருப்போம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஒவ்வொரு மானிடரையும் உருவாக்க வழிகாட்டிகளாகச் சொல்வார்கள். ஆனால், என்னைக் கேட்டால் எல்லா மாணவர்களும் திருக்குறளைப் படித்தால் போதும். அவர்களின் குண நலன்கள் மேன்மையாக அமையும்.
அப்படிப்பட்ட, திருக்குறளை நமக்கெல்லாம் வழங்கிய திருவள்ளுவருக்கு எங்களால் ஆன சிறப்பைச் செய்ய நினைத்தோம். அதன் படி, திருவள்ளுவரை எங்கள் பள்ளியில் கொண்டாடும் விதமாக, பனை ஓலையில் மாணவர்களை வைத்து 1330 திருக்குறள்களையும் எழுத வைக்க முடிவெடுத்தோம். அதற்காக, பனை கன்றுகள் இருக்கும் இடங்களைத் தேடிச் சென்று, பழுதில்லாத பனை ஓலைகளாகப் பார்த்து வெட்டி எடுத்து வந்தோம்.
சில வாரங்கள் முயற்சி செய்து அவற்றைக் காய வைத்து, பனை ஓலைகளைச் சரி செய்துகொண்டோம். அவற்றில் திருக்குறளை எழுத மாணவர்களுக்கான அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களைத் தவிர, 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர். முதலில் அதிகாரத்தை ஓலையில் எழுதி, பின்பு அந்த அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களை மகிழ்ச்சியுடன் எழுதினர். ஒவ்வொரு அதிகாரமும் எழுதி முடித்தவுடன் நூல் கட்டுகள் போட்டுக் கட்டப்பட்டது.
திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களின் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் விதமாகவும். பழங்காலத்தில் தமிழ் இலக்கியம், வரலாற்றுச் சுவடுகள் அனைத்தும் காகிதம் கண்டுபிடிக்க முடியாத காலத்திலேயே சுவடிகளில் எழுதப்பட்டது. இன்று நவீன யுகத்தின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இருந்தாலும் பழைமையான பனை ஓலையில் எழுத வைக்கப்பட்டது ஒரு வித்தியாசமான அனுபவமாக ஆசிரியர்களான எங்களுக்கே இருந்தது.
உண்மையில் அதீத ஆர்வத்துடன் இந்த முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டனர் என்றே சொல்ல வேண்டும். மொத்தமாக, 1330 குறள்களையும் அனைத்து மாணவர்களும் எழுதி முடிக்க இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது. இதன்மூலம், திருக்குறளின் முக்கியத்துவம் ஒருசில மாணவர்களின் மனதில் பதிந்தால்கூட, இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக அதை எடுத்துக்கொள்கிறோம்.
அதோடு, நமது முன்னோர்கள் பனை ஓலைகளில் தான் அத்தனை இலக்கியம், வரலாறுகளை எழுதி வைத்தார்கள் என்பதை மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமாக இதன்மூலம் உணர்த்த முடிந்திருக்கிறது. தொடர்ந்து, திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் முக்கியத்துவத்தை இதுபோன்ற வித்தியாசமான முன்னெடுப்புகள் மூலம் மாணவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருப்போம்” என்றார் உறுதியான வார்த்தைகளில்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…