ஸ்ரீநகர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி சேரப் போவதாக வெளியான செய்தியை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி ஆதாரமற்றது என்று அக்கட்சி கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை மாநிலமாக மாற்ற பாஜக கூட்டணியில் இணைய தேசிய மாநாட்டுக் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக முதல்வர் உமர் அப்துல்லா பாஜக உயர்மட்டத் தலைமையை சந்தித்துள்ளதாகவும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியது.
இந்நிலையில், இந்த செய்தியை தேசிய மாநாட்டுக் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் தன்வீர் சாதிக் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது அவமானகரமானது மற்றும் பொறுப்பற்றது. இந்த கட்டுக்கதையின் பின்னணியில் உள்ளவருக்கு நான் சவால் விடுகிறேன். உமர் அப்துல்லா சந்தித்ததாகக் கூறப்படும் ‘பிஜேபியின் உயர்மட்ட தலைமை’ என்று அழைக்கப்படுபவரின் பெயரைக் கூறுங்கள் அல்லது நீங்கள் வெளியிட்ட தவறான செய்தியை உடனடியாக வாபஸ் பெறுங்கள்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் ஒமர் அப்துல்லா சந்தித்தது வெளிப்படையான ஒன்று. இதனை பத்திரிகையாளர் வேறுவிதமாக கூறினால், அவர் தனது கருத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் அல்லது அது பொய் என ஒப்புக்கொள்ளட்டும். இதுபோன்ற ஏமாற்று வேலைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்தப் புனையப்பட்ட கதையை உடனடியாக வாபஸ் பெறாவிட்டால், பொது மன்னிப்புக் கோராவிட்டால், எங்கள் கட்சியின் நன்மதிப்பைக் கெடுக்கும் மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். இது போன்ற நேர்மையற்ற பத்திரிகைகளை பொறுத்துக் கொள்ள முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.