புதுடெல்லி: ஜெர்மனியில் மருத்துவர் ஒருவர் கிறிஸ்துமஸ் சந்தையில் காரை மோதி நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் செய்து வருகிறது.
ஜெர்மனியின் மேக்டேபர்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, மிகப்பெரிய ஷாப்பிங் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு கார் அதிவேகமாக வந்து சாலையில் செல்வோர் மீது மோதியபடி நிற்காமல் சென்றது. இதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சவுதி மருத்துவர்: காரை தாறுமாறாக ஓட்டி தாக்குதல் நடத்தியவர், சவுதி அரேபியாவை சேர்ந்த மனநல மருத்துவர் தலேப் (50) என தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காரை மோதி நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
காயம் அடைந்த இந்தியர்களின் குடும்பத்தினரை பெர்லினில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜெர்மனியில் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். 5 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. பலர் காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். காயம் அடைந்த இந்தியர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படுகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு சவுதி அரேபிய அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனி மக்கள் மற்றும் அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சவுதி தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் இதே போல் டிரக் ஒன்றை தீவிரவாதி தாறுமாறாக ஓட்டி சென்று தாக்குதல் நடத்தினார். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். பின்னர் இத்தாலியில் அந்தத் தீவிரவாதியை போலீஸார் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.