உ.பி.யின் சம்பலில் 150 ஆண்டுகள் பழமையான 400 சதுர மீட்டர் பரப்பளவிலான படிகிணறு இருப்பது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரின் சந்தவுசி பகுதியில் உள்ள ஜாமா மசூதி, கோயிலை இடித்து கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம் களஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. கள ஆய்வின்போது வன்முறை வெடித்தது.
இதனிடையே, இந்த மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் திருடப்படுவதாகவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான சோதனையின்போது, தீபா சராய் பகுதியில் 46 வருடங்களாக மூடப்பட்டிருந்த ஒரு கோயில் திறக்கப்பட்டது. அதில் சிவலிங்கமும், ஹனுமன் சிலையும் இருந்தது.
இந்நிலையில், இந்திய தொல்லியல் ஆய்வு துறையினர் சந்தவுசி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு படிகிணறு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா நேற்று கூறும்போது, “தொல்லியல் துறையினரின் ஆய்வில் 400 சதுர மீட்டர் பரப்பளவிலான படிகிணறு மண்ணில் புதைந்து இருந்தது தெரியவந்துள்ளது. இது பிலாரி மன்னரின் தாத்தா காலத்தில் (சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4 தளங்கள் உள்ளன. இதில் பாதிக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.