காசாவுக்கு வாடிகன் தூதர் வந்திருக்கும் சமயத்தில் இஸ்ரேல் தாக்குதல்.. 20 பேர் பலி

டெய்ர் அல்-பலாஹ்:

காசா பகுதி முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க வாடிகன் தூதர் வந்திருக்கும் சமயத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காசாவில் மிகவும் குறைந்த அளவிலேயே கிறிஸ்தவ மக்கள் வசிக்கின்றனர். அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காக வாடிகன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான கார்டினல் பியர்பட்டிஸ்டா பிஸ்ஸபல்லா வந்துள்ளார். இன்று நடைபெற்ற பிரார்த்தனை மற்றும் கொண்டாட்ட நிகழ்வில் அவர் பங்கேற்றார். அவர் காசாவிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்தது. எனினும், ஏற்கனவே காசாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பகுதிகளில் தாக்குதலையும் நடத்தி உள்ளது.

நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் காசா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளியும் ஒன்று. பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளியில் தஞ்சமடைந்திருந்த ஹமாஸ் போராளிகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் நடந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் கருத்து தெரிவிக்கப்படவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.