சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் விரைவில் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தினாலும், இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஹைப்ரிட் மாடலில் போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான போட்டி அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
துபாயில் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. துபாய் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை என்றாலும், யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஜெய்ஷ்வால்
ஒருநாள் போட்டிகளில் சுப்மான் கில் மற்றும் ரோஹித் ஷர்மா தற்போது தொடக்க ஆட்டக்காரர்களாக இடம் பெற்று வருகின்றனர். 2023 ஒருநாள் உலக கோப்பையிலும் இதே கூட்டணி தான் தொடர்ந்தது. ஆனால் இந்த முறை ஒரு இடது கை ஆட்டக்காரர் ஓப்பனிங் செய்ய வேண்டும் என்று ஜெய்ஷ்வாலை ஒருநாள் அணிக்குள் கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் சுப்மான் கில் 3வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது. தற்போது டெஸ்டில் சுப்மான் கில் அப்படி தான் பேட்டிங் இறங்கி வருகிறார். இதுவரை 265 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 31 சதங்களுடன் 10,866 ரன்கள் எடுத்துள்ளார். கில் 47 போட்டிகளில் 58.20 சராசரியில் 2,328 ரன்கள் எடுத்துள்ளார். ஒருவேளை தேவைப்படும் பட்சத்தில் கேஎல் ராகுல் ஒப்பனராக தேர்வு செய்யப்படலாம்.
மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்
டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும், ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியில் தனது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். சமீபத்திய உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். எனவே மிடில் ஆர்டரில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெறலாம். அணியின் தேர்வை பொறுத்து பந்த் அல்லது கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
ஆல் ரவுண்டர் யார்?
ஹர்திக் பாண்டியா முதல் தேர்வு ஆல்ரவுண்டராக இருப்பார். இருப்பினும், ஜடேஜா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்திய போட்டிகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இதற்கிடையில், அனுபவம் வாய்ந்த ஜடேஜாவை அணியில் இருந்து நீக்க முடியாது. மேலும் அக்சர் படேலும் பேக்கப் தேர்வாக இருப்பார்.
பவுலிங் கை கொடுக்குமா?
ஸ்பின்னராக குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருக்கலாம். அதே சமயம் வருண் சக்கரவர்த்தியும் தேர்வு செய்யப்படலாம். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி இடம் பெறுவாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. சமீபத்திய போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தாண்டி ஷமி அணியில் இடம் பெற வேண்டும்.