டமாஸ்கஸ்: “மாஸ்கோவில் வாழ இயலாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்” என்று சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி அஸ்மா அல் ஆசாத் கோரியுள்ளார். ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளதாக அரபு மற்றும் துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்தது. ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச்டிஎஸ் கிளர்ச்சிப் படை தொடங்கியது. அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால் ஆசாத் தலைமையிலான சிரியா ராணுவம் பின்னடைவை சந்தித்தது. இதனால் முக்கிய நகரங்களை கைப்பற்றிய எச்டிஎஸ் வீரர்கள், தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8-ம் தேதி கைப்பற்றினர். இதையடுத்து, ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். அவர் செல்வதற்கு முன்னதாகவே அவரது குடும்பத்தினர் அங்கு சென்றுவிட்டனர்.
இந்தப் பின்னணியில் தான் ஆசாத்தின் மனைவி அஸ்மா விவாகரத்து கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததோடு மாஸ்கோவில் இருந்து வெளியேற சிறப்பு அனுமதியும் கோரியுள்ளார். அஸ்மா பிரிட்டிஷ் – சிரிய குடும்பத்தில் பிறந்தவர். அவரது 2000 ஆம் ஆண்டில் தனது 25-வது வயதில் சிரியா சென்றார். அங்கு பஷார் அல் ஆசாத்தின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக, பஷார் அல் ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றதாகவும், இந்தத் தொகையை கடந்த 2018 மற்றும் 2019 காலகட்டத்தில் ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதேபோல், மாஸ்கோவின் நுகோவோ விமான நிலையம் சென்றடைந்த கரன்சிகள் அந்நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், ஆசாத்தின் உறவினர்கள் இதே காலத்தில் ரஷ்யாவில் ரகசியமாக சொத்துகளை வாங்கியதாவும் தகவல் வெளியானது. சிரியாவிலிருந்து பஷார் அல் ஆசாத் வெளியேறிவிட்டாலும் அவரையும், அவரது குடும்பத்தையும் சுற்றிய பரபரப்பு செய்திகள் மட்டும் குறைந்தபாடில்லை.