புனே: புனேவில் நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று (டிச.23) அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில், “புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைமேடையில் தொழிலாளர்கள் சிலர் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைமேடையில் ஏறியுள்ளது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளோம். அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். உயிரிழந்தவர்கள் வைபவி பவார் ( 1 வயது), வைபவ் பவார் ( 2 வயது), விஷால் பவார் (22) என அடையாளம் தெரியவந்துள்ளது. காயமடைந்துள்ள 6 பேரும் சசூன் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் சாலை விபத்துகள்: இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கடந்த டிசம்பர் 13-ல் மக்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, ஒரு கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய தரைவழிப் போக்குவரத்து-நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2024இல் நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்துத் தெரிவித்த தகவல்கள் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதாக அமைந்தது.
அதன்படி, 2022-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளது. சாலை விபத்துக்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2022-ல் தமிழகத்தில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 54,432 சாலை விபத்துக்களும், உத்தரப்பிரதேசத்தில் 41,746 சாலை விபத்துக்களும், கேரளாவில் 43,910 சாலை விபத்துக்களும், கர்நாடகாவில் 39,762 சாலை விபத்துக்களும் நடந்துள்ளன. மகாராஷ்டிராவில் 33,383, தெலங்கானாவில் 21,619, ஆந்திரப் பிரதேசத்தில் 21,249, குஜராத்தில் 15,751 சாலை விபத்துக்கள் நேரிட்டுள்ளன.
அதிக வேகம், மொபைல் போன் பயன்பாடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், விதிகளைப் பின்பற்றாமல் தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்தாமை, வாகனங்களின் மோசமான நிலை, வானிலை சூழல்கள், சாலைகளில் பழுது போன்ற பல காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.