தமிழ்நாடு விடுதலைப்படை… அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், ‘விடுதலை பாகம் 1’ மற்றும் ‘பாகம் 2’ திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980’களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது…
அப்போது நக்ஸலைட் இயக்கத்துக்கு இரண்டு கொள்கைகள்தான் இருந்தன. ஒன்று – அறுவடை இயக்கம் நடத்துவது… இன்னொன்று – அழித்தொழிப்பது! பெரும் பணக்காரர்களின் நிலங்களில் விளையும் விளைச்சலை அந்த வயல்களில் கூலிவேலை செய்யும் விவசாயக் கூலிகளே அறுவடை செய்து, அந்த மகசூலை அவர்களே எடுத்துக் கொள்ளச் செய்வதற்குப் பெயர்தான் ‘ அறுவடை இயக்கம் ‘. ‘ உழுபவனுக்கே நிலம் சொந்தம் ‘ என்ற முழக்கத்தின் அடிப்படையில் இதெல்லாம் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இப்படி நடந்தது.
அழித்தொழித்தல் என்றால் சமுதாய விரோதிகள் என்று சிலரை முடிவுகட்டி அவர்களைச் கொலை செய்து, இல்லாமல் ஆக்கிவிடுவதுதான். கூலியாட்களை வதைக்கும் நிலப்பிரபுக்கள், வட்டித் தொழில் செய்து ஈவு இரக்கமின்றிப் பணம் பிடுங்கும் கந்துவட்டிக்காரர்கள், பலரது சொத்துக்களை அபகரிக்கும் பெரும் பணக்காரர்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்டையே நக்ஸலைட்டுகள் எடுத்து வைத்திருந்தார்கள். இவர்களை ஒவ்வொருவராகக் கொன்றுவிடுவதுதான் அழித்தொழித்தல் ‘. தீவிரவாதத்தின் பின்னால் இளைஞர்களை இழுத்து பலப்படுத்த எடுத்த எடுப்பில் சரியான வழி, ‘ அழித்தொழிப்பது தான் என்ற முடிவுக்கு வந்தார் தமிழரசன்.
தான் நன்கு பழகிய இடத்தில்தான் அதைச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் செய்தார். அவரது சொந்தக் கிராமத்துக்குப் பக்கத்திலிருக்கும் பெரிய ஊர் ஸ்ரீமுஷ்ணம். அந்த ஊரின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எசனூர் பிள்ளையைத்தான் தன் குறியாகத் தீர்மானித்தார். நாள்கணக்கில் எல்லாம் திட்டமிடவில்லை. யோசித்த அன்றிரவே, நேரே அவர் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.
அது முன்னிரவு நேரம்தான்… தமிழரசன் கையிலிருந்தது ஒரே ஒரு பிச்சுவா கத்தி…. ” யாரது…? ” என்று கேட்டவாறு தெருவிளக்கைப் போட்டுவிட்டுக் கதவைத் திறந்தது பிள்ளைதான்… இருட்டான உள்ளறையிலிருந்து வந்த பிள்ளை, வாசக்காலை மிதித்தபிறகுதான் வெளிச்சம் அவர்மீது விழுந்தது. அவரை முழுசாக ஒரு நொடி பார்த்துவிட்டு, அடுத்த கணமே கத்தியைப் பாய்ச்சினார் தமிழரசன்.
‘ சரசரவென நான்கைந்து குத்துகள்… ரத்தம் பீறிட்ட அதே வேகத்தில் பிள்ளை கீழே விழுந்து பெருங்குரலில் அலறினார். வீட்டின் பின்கட்டிலிருந்து வேலையாட்கள் ஓடிவரும் காலடிச் சத்தம் கேட்டது. தமிழரசன் அங்கேயே கத்தியைப் போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தார். வந்த ஆட்கள் பிள்ளைபைப் பார்த்துவிட்டு, நிலைமையை உணர்ந்து ரோட்டை எட்டிப் பிடிப்பதற்குள் தமிழரசன் தெருமுனையை நெருங்கிவிட்டார்!
இரண்டு பேர் அவசரமாக ரோட்டில் இறங்கி தமிழரசனைத் துரத்த, இரண்டு பேர் பிள்ளையை தூக்கினார்கள். துரத்தியவர்கள் காட்டிய வேகம், தமிழரசனுக்கும் அவர்களுக்குமான இடைவெளியைக் குறைத்தது. முன்னிரவு நேரம் என்பதால், ரோட்டோரமாக இருந்த கூட்டம் இந்த ஓட்டத்தைப் பார்த்துப் பரபரப்பாகி தமிழரசனைப் பிடிக்க வந்தது. நொடியில் திட்டமிட்டுக் குரல் கொடுத்தார் தமிழரசன்.
தனக்கு முன்னால் யாரோ ஓடுவது போலவும் அவர்களைத் தான் துரத்துவது போலவும் பாவனை செய்துகொண்டு, ” நம்ம எசனூர் பிள்ளையைக் கொன்னுட்டு ஓடறான். பிடிங்க…. பிடிங்க! ” என்று கத்த… ஒரு பெரும் கும்பலே தமிழரசனோடு சேர்ந்து, இல்லாத ஒரு ஆளைத் துரத்த ஆரம்பித்தது! நிஜமாகத் துரத்திய இருவர், அந்தக் கும்பலுக்கு விஷயத்தைப் புரியவைத்து தமிழரசனை நெருங்க முடியாமல் போக… கும்பலிலிருந்து நைஸாகக் கழன்று சந்துபொந்துகளில் புகுந்து தப்பித்தார் தமிழரசன்!
எசனூர் பிள்ளை பிழைத்துக்கொண்டார். குத்திய தமிழரசனையும் சரியாக அடையாளம் சொன்னார். போலீஸ் முதல்முறையாகத் தன் ரெக்கார்டுகளில் தமிழரசன் பெயரைப் பதிந்து கொண்டு தேட, அவரோ… வேறு வேடத்துக்கு மாறியிருந்தார். முந்திரிக்காட்டுக் கிராமங்களின் விவசாயிகளிடம் ஒரு பொதுவான தன்மை இருக்கும். அவசியம் ஏற்பட்டாலொழிய சட்டை போட மாட்டார்கள்.
அந்தச் செம்மண் பூமி கிளப்பிய புழுதி உடலில் படிந்திருக்க, கறுத்த தேகம் லேசாகச் சிவந்து மினுமினுப்பு காட்டும். இடுப்பில் அணியும் வேட்டிகூட இந்தப் புழுதியின் பாதிப்பால் செம்மண் நிறத்துக்கு மாறிவிடும். தோளில் அணிந்த ஒற்றைத்துண்டும் அழுக்கேறி கிடக்கும். சமயத்தில் அதற்கு தலைப்பாகையாக பிரமோஷன் தரப்பட்டு, தலையில் கட்டப்படும். தமிழரசனும் தன் இன்ஜினீயரிங் தகுதியை மறந்து, டிப்டாப் உடைகளைத் துறந்து, இப்படி ஒரு கிராமத்து ஆசாமியாக உருமாறிவிட்டார். ஒரு ஓட்டை சைக்கிள் அவருக்கு எப்போதும் துணையாக இருக்கும். பெயிண்ட் மினுமினுப்பு போய், துருவேறி கறுத்துக் கிடக்கும் அந்த சைக்கிளும்கூடப் புழுதி நிறத்தில் இருக்கும். தலைமறைவு வாழ்க்கையின் பெரும்பாலான காலங்களில் இந்த சைக்கிள்தான் அவருக்குத் துணை. எங்காவது ரொம்ப தூரத்தில் இருக்கும் ஊர்களுக்குப் போனால்கூட, அங்கு யாராவது தோழரிடம் சைக்கிள் வாங்கிக் கொண்டுதான் பயணிப்பார் சைக்கிளின் ஹாண்டில்பாரில் ஒரு துணிப்பை தொங்கும். அதில் சில புத்தகங்கள் கிடக்கும். இதுதவிர இன்னொரு செட் அழுக்கு இதே கோலத்தோடு கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் போய் வந்துவிட்டார் அவர்.
போலீஸும் அவரது போட்டோவை வைத்துத் தேடித் தேடி ஓய்ந்துவிட்டது. முந்திரிக் காட்டைத் தாண்டி ரொம்ப தூரம் போனால் பஸ்ஸிலோ, ரயிலிலோ போவார். அப்போதுகூட அவசியமானால் மட்டுமே சட்டை போடுவார். சமயங்களில் மைல் கணக்கில் நடந்தே போயிருக்கிறார். தருமபுரி, சேலம் பகுதிகளிலுள்ள மலைக்காடுகளில் தலைமறைவாக இருந்தபோது, இப்படி நடந்தேதான் மறைவிடங்களைத் தேடிப்போவாராம்!
அவரது சாப்பாட்டுப் பழக்கங்களும் ரொம்ப வித்தியாசமானது. தொடர்ந்து மூன்று நாட்கள் கூடப் பட்டினி கிடந்தாலும், தெம்பாக அவரால் அலைய முடியும்! நான்காவது நாள் எங்காவது சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தால் போதும்… அந்த மூன்று நாள் பாக்கியையும் சேர்த்து, ஒரே வேளையில் சாப்பிட்டுவிடுவார்!
ஒல்லியான உடம்பு…. ஒட்டிய வயிறு! இப்படி ஒரு ஆள் அப்படிச் சாப்பிடுவதை யார் பார்த்தாலும் மலைத்துப் போய்விடுவார்கள். இப்படிப் பொது இடத்தில் அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்கு பயந்தே தமிழரசன் எப்போதும் ஓட்டலில் சாப்பிடுவதில்லை! பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று யாராவது தோழர் வீட்டைத் தேடிப் பிடித்துதான் சாப்பிடுவார். ஒரு சமயம்… சென்னையில் கொத்தவால்சாவடி ஏரியாவில் நான்கு தோழர்களோடு தங்கியிருந்தார் தமிழரசன்.
ஒரு தோழர் எங்கெங்கோ போய், இருபது ரூபாயை யாரிடமிருந்தோ வாங்கி வந்தார். இருபது ரூபாயில் ஐந்து பேர் வயிறு நிறைய என்ன சாப்பிடலாம் என்று கும்பலாக உட்கார்ந்து விவாதித்தனர். பத்து நிமிடம் பொறுத்துப் பார்த்தார் தமிழரசன். ” தோழர்! நீங்கள்லாம் எது வேணா சாப்பிடுங்க… என்னோட பங்கு நான்கு ரூபாயைக் கொடுத்துடுங்க. நான் போய் வயிற்றை ரொப்பிக்கறேன்… ‘ ‘ என்றார்.
” என்ன சாப்பிடப் போறீங்க…? ” என்று மற்ற நால்வரும் ஆர்வமாகக் கேட்டனர். ” நான் சாப்பிடறதை உங்களால சாப்பிட முடியாது. தப்பா நினைச்சுக்காதீங்க… ” என்று சொல்லியபடி கிளம்பிவிட்டார் தமிழரசன். நான்கு ரூபாயை எடுத்துக்கொண்டு கொத்தவால்சாவடி மார்க்கெட்டுக்குப் போனார். காலை நேர வியாபாரம் முடிந்து, அவ்வளவாகக் கூட்டமில்லாமல் இருந்தது மார்க்கெட்.
தமிழரசன் கையிலிருந்த நான்கு ரூபாய்க்கு, அன்றைய விலைவாசிக்கு ஒரு கூடை தக்காளி கிடைத்தது! தக்காளிக் கூடையோடு வீட்டுக்கு வந்த தமிழரசனை மிரண்டுபோய்ப் பார்த்தனர் கூட்டாளிகள். அவர்களுக்குத் தக்காளியின் மருத்துவக் குணங்களை விளக்கியபடியே, பத்தே நிமிடங்களில் கூடைத் தக்காளியையும் சாப்பிட்டுக் காலி செய்துவிட்டார்! காலிக் கூடையை வெளியே தூக்கிப் போட்டபடி, ” இன்னும் மூணு நாளைக்குப் பிரச்னை இல்லை… ‘ ‘ என்றார் கூலாக.
மேலும் சலசலக்கும்..!