காஷ்மீரில் 40 நாள் கடும் குளிர் காலம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஸ்ரீநகரில் கடந்த வெள்ளி இரவு வெப்ப நிலை மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது கடந்த 50 ஆண்டுகளில் மிக குறைவான வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் கடும் குளிர் காலம் தொடங்கும். இது 40 நாட்கள் நீடிக்கும். இந்த கடும் குளிர் காலம் காஷ்மீரில் நேற்று முன்தினம் தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த வெள்ளி இரவு ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 8.5 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இது கடந்த 50 ஆண்டுகளில் மிக குறைவான வெப்ப நிலை.
இதற்கு முன் கடந்த 1974-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெப்ப நிலை மைனஸ் 10.3 டிகிரி செல்சியஸாக குறைந்தது. கடந்த 1934-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி அன்று ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 12.8 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
காஷ்மீரில் தற்போது கடும் குளிர் நிலவுவதால் தால் ஏரியின் சில பகுதிகள் உட்பட பெரும்பாலான நீர் நிலைகள் உறைந்து வருகின்றன. காஷ்மீரின் பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலமான பகல்காமில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 8.6 டிகிரி செல்சியஸாகவும், குல்மார்க்கில் மைனஸ் 6.2 டிகிரி செல்சியஸாகவும், குப்வாராவில் மைனஸ் 7.2 செல்சியஸாகவும் பதிவானது.
காஷ்மீரில் டிசம்பர் 26-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் எனவும், உயரமான மலைப் பகுதிகளில் லேசான பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் குளிர் காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடும் குளிர் காலம் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைந்ததும் காஷ்மீரில் குளிர் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.