பெங்களூரு:
பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் “டிஜிட்டல் அரெஸ்ட்” மோசடியால் ரூ.11.8 கோடியை இழந்துள்ளார். பண மோசடி செய்வதற்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க அவரது ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்ட்டிருப்பதாகவும், இதற்காக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் பேசுவதைப் போன்று பேசி இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை இந்த மோசடி நடந்துள்ளது.
முதலில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு, சட்டவிரோத விளம்பரங்களுக்கும், துன்புறுத்தும் செய்திகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதற்காக மும்பை கோலாபா சைபர் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
அதன்பின்னர் போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் பேசியிருக்கிறார். ‘பண மோசடிக்காக உங்களின் ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் வாயிலாக நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும், இல்லாவிட்டால் நேரடியாக வந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்த நபர் மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சாப்ட்வேர் என்ஜினீயர், அந்த நபர் சொன்னபடி ஸ்கைப் ஆப் டவுன்லோடு செய்து, மறுமுனையில் மும்பை போலீஸ் உடை அணிந்து வீடியோ காலில் பேசிய நபரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
அப்போது, அந்த நபர் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாக கூறி போலியான வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி, அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, சில வங்கிக் கணக்குகளுக்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கூறி உள்ளார். கைது நடவடிக்கைக்கு பயந்த சாப்ட்வேர் என்ஜினீயர், அந்த நபர் சொன்ன வங்கி கணக்குகளுக்கு ரூ.11.8 கோடி அனுப்பியிருக்கிறார்.
இருப்பினும், அந்த நபர்கள் மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியபோது, சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.