தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தின் தோமாலகூடா பகுதியில் நகை கடை வைத்திருந்தார் இந்திரஜித். சில தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளான இவர், வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் இவரது அண்ணனோ வேறொரு இடத்தில் நகை கடை வைத்து அதனை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். இதனால், தம்பி இந்திரஜித்துக்கு தனது அண்ணனைப் பார்த்து பொறாமை ஏற்பட்டது. எப்படியாவது அவனை நடுத்தெருவுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டம் தீட்டினார்.
இதன்படி, கொள்ளை அடிக்கும் கும்பல் உதவியுடன் அண்ணன் வீட்டில் உள்ள நகை, பணத்தை கொள்ளை அடிக்க இந்திரஜித் திட்டம் தீட்டினார். அதன்படி கொள்ளை அடிக்க 11 பேரை திரட்டினார். அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு அண்ணனின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தனர். அவர்களை கட்டிப் போட்டு விட்டு, தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.9 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தோமாலகூடா போலீஸார் மற்றும் அதிரடிப்படையினர் இவர்கள் சென்ற காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து 12 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கொள்ளை அடித்த ரூ.1.2 கோடி மதிப்புள்ள நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர். இது தவிர கொள்ளை அடிக்க பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, ரம்பம், கத்தி ஆகிய ஆயுதங்களையும் போலீஸார் கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றினர்.