இந்திய அணியில் பெரிய ஓட்டை… கைவிட்டுப்போகும் கோப்பை? ரோஹித்தின் அடுத்த மூவ் என்ன?

Border Gavaskar Trophy Latest News Updates: இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால் மீதம் இருக்கும் இரு போட்டியிலும் வென்றால் மட்டுமே யாரானாலும் தொடரை வெல்ல முடியும். 

தொடரை டிரா செய்தால் இந்திய அணி தொடர்ச்சியாக 5ஆவது முறையாக கோப்பையை தக்கவைக்கும் என்றாலும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு சற்று சிக்கலுக்கு உள்ளாகிவிடும். எனவே, இந்திய அணியும் சரி, ஆஸ்திரேலிய அணியும் (Team Australia) சரி எப்படியாவது தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

பும்ராவை நம்பி இந்திய அணி

இந்திய அணி  (Team India) முதல் போட்டியில் பலமாக தோற்றமளித்தாலும் கடந்த இரு போட்டிகளாக சற்று பலவீனமாகவே விளையாடி வருகிறது. பந்துவீச்சில் ஒட்டுமொத்தமாக பும்ராவை நம்பியே இந்திய அணி இருக்கிறது எனலாம். கடந்த மூன்று போட்டிகளும் அதைதான் சொல்கின்றன. பும்ரா 6 இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளையும் 10.90 சராசரியில் எடுத்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு (Jasprit Bumrah) அடுத்து இந்திய அணி பந்துவீச்சில் சிராஜ் 6 இன்னிங்ஸ்களில் 23.92 சராசரியுடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரும் சிராஜ் போலவே வீசியிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் அளவிற்கு சிராஜ் தொடர்ச்சியாக ஒரே லைன் & லெந்தில் பந்துவீசுவதில்லை. அதுவே பெரிய சிக்கலை அளிக்கிறது.

நிதிஷ்குமார் ரெட்டி தேவையா?

இந்த நிலையில், மெல்போர்ன் டெஸ்டில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் சேர்க்கப்படுவார் என கூறப்படும் நிலையில், இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக யார் இருக்கப்போகிறார் என்ற கேள்வியும் கூடவே வருகிறது. நிதிஷ்குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) பேட்டிங்கில் கைக்கொடுத்தாலும், பந்துவீச்சில் இன்னும் அவர் ஒரு மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற அளவிற்கு தேர்ச்சி அடையவில்லை.

வேகப்பந்துவீச்சாளர்கள் சுமார் முதல் 20 ஓவர் வரை பந்துவீசியாக வேண்டும் என்பதால் மூன்றாவது வேகபந்துவீச்சாளராக ஆகாஷ் தீப் தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. நிதிஷ்குமார் ரெட்டியும் வேண்டும் என்றால் நிச்சயம் இந்திய அணி ஒரு சுழற்பந்துவீச்சாளருடனே செல்ல நேரிடும்.

இந்திய அணியில் இருக்கும் பெரிய ஓட்டை

இது ஒருபுறம் இருக்க, நம்பர் 8 வரை பேட்டிங் வேண்டும் என இந்திய அணி அடம்பிடிப்பதற்கு முக்கிய காரணம் இந்திய அணி பேட்டிங்கில் இருக்கும் பெரிய ஓட்டைதான் எனலாம். அந்த ஓட்டை வேறு யாரும் இல்லை, கேப்டன் ரோஹித் சர்மாதான். ரோஹித் சர்மா (Rohit Sharma) உலகத்தரமான வீரர் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மாறாக தற்போதைய பேட்டிங் ஆர்டரில் அவர் பெரியளவில் சோபிக்க தவறுகிறார். அவரது பேட்டிங் நுட்பம் சற்று பின்தங்கியிருப்பதாகவே தெரிகிறது. இந்த தொடரில் அவர் 3 இன்னிங்ஸில் 19 ரன்களை சேர்த்துள்ளார். 

அதாவது, வங்கதேச தொடர், நியூசிலாந்து தொடர், ஆஸ்திரேலிய தொடர் என கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 152 ரன்களை மட்டும் அடித்துள்ளார். அவரது சராசரி 11.69 ஆக உள்ளது. ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மான் கில், விராட் கோலி போன்றோரும் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் அவர்களின் நுட்பத்தில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. ஆனால், ரோஹித் சர்மாவிடம் கண்கூடாக தெரியும் அந்த தடுமாற்றம்தான் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் இருக்கும் ஓட்டை எனலாம். 

வைரலாகும் வீடியோ

அந்த வகையில், தற்போது மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு (MCG Test) வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரோஹித் சர்மா, பார்ட் டைம் சுழற்பந்துவீச்சாளரான தேவ்தத் படிக்கலின் பந்துவீச்சில் தடுமாறிய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி (Rohit Sharma Devdutt Padikkal Net Practice Viral Video) வருகிறது.

Rohit Sharma got beaten by Part-time Bowler Devdutt Padikkal in the nets pic.twitter.com/6iGlPXO6Nl

— Jyotirmay Das (@dasjy0tirmay) December 22, 2024

ஒருவேளை இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிபெறாமல் போய்விட்டால் ரோஹித் சர்மா டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வுபெற்றுவிடுவார் எனவும் ரசிகர்கள் கணிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.