சென்னை: “மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு,செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், “கிறிஸ்தவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது.” என்று பாஜகவை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (டிச.24) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இன்றைய பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்காகவே மதமாற்றத் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது. இதன்மூலம், கிறிஸ்தவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அச்சுறுத்தப்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது. கிறிஸ்தவ சமுதாயத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதில் ராகுல்காந்தி எப்போதுமே முன்னணிப் பங்கு வகித்து வருகிறார்.
கிறிஸ்தவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. 1951 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவ சமுதாயத்தினர் 2.5 சதவிகிதம் இருந்ததை விட 2024 இல் மக்கள் தொகை பெருகவில்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் கூறுகின்றன. இயேசு பிரானின் போதனைகளை சிரமேற்கொண்டு அதன்படி அனைத்து மத மக்களையும் சகோதர மனப்பான்மையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் மக்கள் பணியாற்றுகிற கிறிஸ்தவ சமுதாயத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
எனவே, மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.