“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி; அரசோ கும்பகர்ணன் போல் தூங்குகிறது” – ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஆனால் அரசோ கும்பகர்ணன்போல் தூங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள கிரி நகர் காய்கறிச் சந்தைக்கு சமீபத்தில் சென்ற ராகுல் காந்தி, பொதுமக்கள் மற்றும் காய்கறி கடைக்காரர்களுடன் உரையாடினார். அப்போது, விலைவாசி உயர்வால் அவதிப்படும் ஏழை எளிய மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றேன். மளிகைக் கடைகள் என்பது பொருட்களை விற்கும் இடம் மட்டுமல்ல. அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்ச்சிபூர்வமான மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.

ஆனால், வணிகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் மூடப்படுகின்றன. இது கவலையளிக்கிறது. எனவே நாம் ஒரு சமநிலையை அடைய வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அவற்றால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்க வேண்டும். உலகப் போக்குகளுக்கு ஏற்ப நாம் முன்னேறும்போது, ​​சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுடன் ராகுல் கலந்துரையாடினார். அப்போது, பணவீக்கம் தரும் பாதிப்பு குறித்த தங்கள் அனுபவங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு, முன்பு பழகிய காய்கறிகளை வாங்க முடியாமல் உணவுப் பழக்கத்தைக் குறைக்க வேண்டி உள்ளது என்று ராகுல் காந்தியிடம் அவர்கள் கூறுகிறார்கள்.

இதை உணர்த்தும் விதமாக, “ஒரு காலத்தில் ரூ.40-க்கு விற்கப்பட்ட பூண்டு, இன்று ரூ.400-க்கு விற்கப்படுகிறது. உயரும் பணவீக்கம் ஏழை, எளிய மக்களின் சமையலறை பட்ஜெட்டை கெடுத்துவிட்டது. ஆனால், கும்பகர்ணன் போல் அரசு தூங்குகிறது” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.