சதுரங்க வேட்டை பாணியில் இரிடியம் விற்பனை மோசடியில் தேனி மாவட்டம், சின்னமனூர், போடி பகுதியைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தேனி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சின்னமனூர் பகுதியில் இருந்து காரில் இரிடியம் கடத்தி வருவதாக ஆண்டிபட்டி போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனபடிப்படையில், ஆண்டிபட்டி போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் 2 கார்களில் வந்தவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து, கார்களை போலீஸார் சோதனை செய்தனர். காரில் இருந்த பெட்டியில் இரிடியம் இருப்பதாகவும், பூஜை செய்த பிறகே பெட்டியை திறக்க வேண்டும் எனக் கூறியதால், காரில் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி தக்கலையைச் சேர்ந்த ஜஸ்டின் ஜெயக்குமாரிடம், ”இரிடியம் விற்பதாக மோசடி செய்துவிட்டனர்” எனப் புகார் பெற்று, தேனியைச் சேர்ந்த 2 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், “தேனியைச் சேர்ந்த குமார், ராஜேஸ் ஆகியோர் எங்களிடம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் இருப்பதாகவும், அதை 10 லட்சம் ரூபாய்க்கு கொடுப்பதாகவும் கூறினர். இதை நம்பி கண்டமனூர் விலக்கு அருகே உள்ள தங்கும் விடுதியில் வைத்து இரிடியத்தை 9.5 லட்ச ரூபாயை குமாரிடம் கொடுத்து வாங்கினேன். இரிடியம் என செம்பு பாத்திரத்தை கொடுத்தபோது, ராஜேஸ் என்பவர் இது இரிடியம் தான் மதுரைக்கு கொண்டு வாருங்கள் கம்பெனியில் வைத்து பேசிக் கொள்ளலாம் எனக் கூறி ஏமாற்றி, தப்பிவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.
போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.