'எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிட்ட அண்ணாமலை' – கடுகடுக்கும் அதிமுக… பின்னணி என்ன?!

சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதையடுத்து பா.ஜ.க, தி.மு.க இடையே உறவு இருப்பதாக அ.தி.மு.க-வினர் விமர்சனம் செய்தனர். அப்போது பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “மத்திய தலைவர்கள் நாணயம் வெளியிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் கிடைத்தது” என சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

இதில் கடுப்பான அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலையின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. அவருக்கு வரலாறு தெரியவில்லை. அண்ணாமலை பிறப்பதற்கு முன்னாகவே எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா

தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை பெற்றவர் என்று பெருமையாக சொல்லப்படுபவர். அப்போது உங்கள் தலைவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை. பொய்களை மட்டுமே பேசுபவர்தான், தமிழக பா.ஜ.க தலைவராக உள்ளார். அண்ணாமலைக்கு என்னை விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வேலை. அவர் வேறு என்ன செய்திருக்கிறார். மைக்கை கண்டால் அவருக்கு வியாதி. உடனே பேசத் தொடங்கிவிடுவார். எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார். அந்தக் கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. இவர் வேறு ஏதோ வழியில் பதவி பெற்றுள்ளார். அதை வைத்து இன்று தலை, கால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

இதற்கு அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பெட்டிங் ஏஜென்ட் கட்சியாக இருக்கிறது. முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் தி.மு.க அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி. எனவே நீங்கள் நேர்மையைப் பற்றி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். கூவத்தூரில் நடந்தது கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வா?. அங்கு நடந்தது அலங்கோலம். டெண்டர் சிஸ்டத்தில் முதல்வரைத் தேர்வு செய்தார்கள். ஹைய்ஸட் பிட்டராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். அதன்பிறகு தவழ்ந்து வந்து முதல்வர் பதவியைப் பிடித்தவர் எடப்பாடி. தன்மானம் மிக்க ஒரு விவசாயின் மகனை, 10 ஆண்டுக்காலம் பச்சை இங்கில் கையெழுத்துப் போட்டு ஒரு பைசா வாங்காத இந்த அண்ணாமலையைப் பார்த்துப் பேசுவதற்கு எடப்பாடி என்கிற தற்குறிக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது” என்றார்.

எம்ஜிஆர்

அதன்பிறகு இரு கட்சித் தலைவர்களுக்கு கடுமையான வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டனர். பிறகு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். சமீபத்தில் தமிழகம் திரும்பிய அண்ணாமலை மீண்டும் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி அ.தி.மு.கவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி தமிழக பா.ஜ.க தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “எம்.ஜி.ஆர், பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள்மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள் தாங்கள் பட்ட துயரங்கள்.

வருங்கால சந்ததியினருக்கும் வரக்கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள். அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தில் உள்ள சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். நம் பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பிரதமர் செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது” என தெரிவித்திருந்தார்.

தராசு ஷியாம்

இதற்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எல்லோரும் சமம் என்றார் எம்.ஜி.ஆர். மதத்தால் பிரிவினை செய்கிறது பா.ஜ.க. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும் என பா.ஜ.க இருக்கிறது. சிறுபான்மையினரை ஒரு மாதிரியும், மற்றவர்களை ஒரு மாதிரியும் பார்க்கிறது. பா.ஜ.க-வை போல் எம்.ஜி.ஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை. எம்.ஜி.ஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்” என தெரிவித்திருந்தார். இதேபோல சமூக வலைத்தளங்களில் இருகட்சியினருக்கு இடையில் வாக்குவாதம் வெடித்திருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் இருக்கும் காலகட்டத்திலேயே எம்.ஜி.ஆர் புகழ் பாடினார்கள். அப்போது அ.தி.மு.க-வினர் பாஜகவை எதிர்க்கவில்லை. இப்போது கூட்டணியிலும் இல்லை. தற்போது பா.ஜ.க-வுக்கு எதிராக தி.மு.க-விடம் இருக்கும் வாக்குகளை தாங்களும் பெற வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க பாஜக-வை எதிர்க்கிறது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.