திருச்சி: “200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும்” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை.வைகோ கூறியுள்ளார்.
பெரியாரின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை.வைகோ இன்று (டிச.24), திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தந்தை பெரியாரால் தான் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு கல்வி, உரிமை பொருளாதாரம் முன்னேற்றம் கிடைத்தது. இன்றும் சில சக்திகள் அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என தவறான கருத்துக்களை கூறி வருகின்றன.
பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று கடவுளை வழிபடுவதற்கான கேட் பாஸ் கொடுத்தது பெரியார் தான். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எனவே தான் 4 ஆண்டுக்கு முன்பே பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்ற கருத்தை நான் முன்வைத்தேன். கடவுளை வழிபடுபவர்கள் கூட பெரியாரை போற்றுகிறார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களுக்கு உரிய நிதியை விடுவிப்பேன் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எங்களிடம் நேரடியாகவே நிர்பந்தம் செய்தார். ஆனால், இரு மொழிக் கொள்கை என்பது திராவிடக் கொள்கையின் பிரதானமான கொள்கை. இதன் காரணமாகத்தான் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசும் திறன் பெற்று உலகமெங்கும் கோலோச்சுகின்றனர்.
திமுக கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது. ஏனென்றால் மக்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார். 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும். அதிகாரியாக இருந்தவர் பொய் சொல்ல மாட்டார்,” என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன், பகுதி செயலாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.