எதிர்காலத்தில் ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர்களில் கூட செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்துவதற்கான மிக முக்கிய கச்சா பொருள் உக்ரைனிடம் உள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3-வது ஆண்டை நெருங்குகிறது. இதில் உக்ரைனால் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட மில்லியன் மணிநேரத்துக்கும் மேலான காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளைக் கொண்டு புதிய ஏஐ மாதிரியை பழக்கப்பட்டுத்த முடியும் என்கின்றனர்.
ஏற்கெனவே நடந்துவரும் போரில் இலக்குகளை அடையாளம் காணவும், மனிதர்களை விட வேகமாக புகைப்படங்களை ஆராயவும் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2 மில்லியன் மணிநேர காட்சிகள்!
உக்ரைனின் போர் முனைகளில் 15,000-க்கும் மேலான ட்ரோன் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கவும் இவற்றின் வீடியோ பதிவுகளை ஆராயவும் OCHI என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் உதவுகிறது. இதன் நிறுவனர் ஒலெக்சாண்டர் டிமிட்ரிவ் கூறுவதன்படி, இவர்களது அமைப்பு 2 மில்லியன் மணிநேரங்களுக்கான அதாவது 228 ஆண்டுகள் நீளமான போர் காட்சிகளை கைவசம் வைத்துள்ளது.
இந்த காட்சிகள் ஏஐயை பழக்கப்படுத்துவதற்கான அளவு தரவுகளை விட அதிகமானதாகவே இருக்குமென்கின்றனர்.
போர் அனுபவங்களை கணிதமாக மாற்றும் வேலை
இந்த தரவுகளை அளித்து உருவாக்கப்படும் ஏஐ, போர் யுத்திகளை வகுக்கவும், இலக்குகளை குறிவைக்கவும், ஆயுத அமைப்புகளின் செயல்திறனை மதிப்பீடு செய்யவும் பயன்படுத்தவும் உதவும்.
“அடிப்படையாக போர் அனுபவங்களை கணிதமாக மாற்றும் வேலையை செய்ய வேண்டும்” என்கிறார் டிமிட்ரிவ். ஆயுதங்களை எந்த இடத்தில் பயன்படுத்தினால் அதிக பலன் கொடுக்கும் என்பதை இனி ஏஐ முடிவு செய்யும்.
OCHI போர் வீடியோக்களை ஆராய்ந்து கள நிலவரத்தை கமாண்டர்களுக்கு எடுத்துரைக்கும் வேலையைச் செய்துவந்தனர். போருக்கு பிறகும் ட்ரோன் காட்சிகள் ஏஐ-க்கு பயனுள்ளதாக இருக்கும் என எண்ணியதால் அதனைச் சேமிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
2022-ம் ஆண்டு போர் தொடங்கியது முதல் ஒவ்வொருநாளும் சராசரியாக 5 முதல் 6 டெராபைட் அளவுள்ள ட்ரோன் காட்சிகள் சேமிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய ஏஐ பயன்பாடு!
உக்ரைன் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் போர்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்த முயற்சிகளில் இருக்கின்றன.
உக்ரைனிடம் இருக்கும் தரவுகள் அடிப்படையில் உருவாகும் ஏஐ ரஷ்யாவுடன் போரிட போதுமானதாக இருக்கும், ஆனால் அமெரிக்காவுக்கு பசிபிக் கடலில் சீனாவை சமாளிக்கும் ஏஐ-யை உருவாக்கும் தேவை இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
Drone Attack video:
உக்ரைன் ஏற்கெனவே போரில் பல விஷயங்களுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகிறது. ஆளில்லா ட்ரோன்கள் மனிதர்களின் துணையில்லாமலேயே ஏஐ மூலம் இலக்குகளைக் கண்டறிந்து வருகின்றன. ஒரு ட்ரோனை மட்டுமல்லாமல் ஒரு ட்ரோன் தொகுப்பை மொத்தமாக கட்டுப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது.
ரஷ்யாவும் போர்களில் தொடர்ந்து ஏஐ-யைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.