பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி நிகால் விஹார் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை, பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா எம் சிங், அமித் சர்மா விசாரித்து அண்மையில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர். பாதிக்கப்பட்ட மாணவி கல்வியை தொடரவும் அவரது எதிர்காலத்துக்காகவும் டெல்லி அரசு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு பெண்களின் நலனுக்காக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை வழக்குகள், திராவக வீச்சு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த கொடூரங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
குறிப்பாக பாலியல் வன்கொடுமை, திராவகம் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், சிராய்ப்புகள், மர்ம உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
பால்வினை நோய்கள், எச்ஐவி-க்கான பரிசோதனை செய்து அதற்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். கருத்தடை, கருக்கலைப்பு குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களின் பெற்றோருக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை 2014-ம் ஆண்டில் விரிவான வழிகாட்டு நெறிகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த வழிகாட்டு நெறிகளை அனைத்து அரசு, தனியார் மருத்துவர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை வரும் பெண்களிடம் அடையாள அட்டை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. எந்த காரணத்துக்காகவும் அவர்களிடம் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. இதுதொடர்பாக அரசு, தனியார் மருத்துவமனைகள் அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும். இந்த அறிவிப்பு பலகை ஆங்கிலம் மற்றும் அந்தந்த பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்ட விதிகள் குறித்து அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாக ஊழியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். விதிகளை மீறும் சுகாதார பணியாளர்களுக்கு ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உயர் சிகிச்சை தேவை என்றால் வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். அதற்கு தேவையான ஆம்புலன்ஸ் வசதியை வழங்க வேண்டும். மருத்துவமனை சார்பில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பெண்கள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதன்பேரில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மாநில சட்ட சேவைகள் ஆணையம், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.