மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, நாளை மறுநாள் (டிச.27) தமிழகம் வர உள்ளார். திருவண்ணாமலை, கோவை, ராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கவுள்ள அவர், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனமும் செய்ய உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, நாளை மறுநாள் (டிச.27) தமிழகம் வர உள்ளார். மறுநாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேரில் சந்தித்து அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோயில் சென்று அமித்ஷா, சுவாமி தரிசனம் செய்கிறார். ஆளுநர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்திருக்கும் வேளையில் அமித்ஷாவின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக பாஜகவில் உட்கட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், அதுகுறித்தும் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கூட்டணி தொடர்பாகவும் அவர் கருத்துக் கேட்கவுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தபோதும், தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதுமே பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விசிக சார்பில் ரயில் மறியல், அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறியிருந்தன. மேலும், அவர் தமிழகம் வருகை தரும் வேளையில் (டிச.28) விசிக சார்பில் அவரை கண்டித்து, சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டத்துக்கு விசிக ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.