ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின்போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் போலீஸார் நேற்று மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. 4-ம் தேதி இரவே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். அதனால், அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ரேவதி என்ற பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இவரின் மகனும், அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகருமான ஸ்ரீதேஜ் என்னும் 9 வயது சிறுவனும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தார். ஸ்ரீ தேஜுக்கு போலீஸாரே முதலுதவி சிகிச்சைகள் அளித்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த வழக்கில் ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
போலீஸாரின் எச்சரிக்கையை மீறி அல்லு அர்ஜுன் வந்ததால்தான், நெரிசல் ஏற்பட்டு ரேவதி உயிரிழந்தார் என தெலங்கானா மாநில பேரவையிலேயே தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளிக்கும் நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத் சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.
அவருடன் அவரது தந்தையும் பட தயாரிப்பாளருமான அல்லு அர்விந்த் உள்ளிட்டோர் வந்தனர். நேற்று காலை 11.05 மணி முதல் மதியம் 2.47 மணி வரை அதாவது சுமார் மூன்றறை மணி நேரம் அல்லு அர்ஜுனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அவரிடம் 20 கேள்விகளுக்கு மேல் கேட்டு அதற்கு விளக்கம் அளிக்குமாறு கூறினர். நடிகர் அல்லு அர்ஜுனிடம், மத்திய மண்டல இணை ஆணையர் ஆகாஷ் கேள்விகளை எழுப்பினார். விசாரணைக்கு முன், அன்றைய தினம் திரையரங்கில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக அல்லு அர்ஜுனுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
அப்போது அல்லு அர்ஜுனிடம், ஒரு வழக்கில் கைதாகி ஜாமீன் கிடைத்து வெளியே வந்து செய்தியாளர்கள் சந்திப்பை எப்படி நடத்தலாம் ? அதற்கு உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? போலீஸ் அனுமதி மறுத்தும், நீங்கள் ஏன் திரையரங்குக்கு வந்தீர்கள்? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்த வீடியோவை விசாரணையின்போது, பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன் கண்ணீர் வடித்துள்ளார். இருட்டில் திரையரங்கில் நடந்த சம்பவங்கள் எனக்கு தெரியவில்லை எனவும், தன் மீதும் தவறுகள் உள்ளன என்றும், போலீஸார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரத் தயார் என்றும் அப்போது அவர் கூறியதாக தெரிகிறது.