புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினரிடமும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2016 டிச.5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, கட்சிக்குள் எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த நிலையில், பழனிசாமி முதல்வரானார். இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.
அதன்பிறகு நடந்த சமரசத்தால் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சசிகலாவையும், டிடிவி. தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு தங்களுக்குள் கைகோத்தனர். பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுத்த தீர்மானங்களின் அடிப்படையில் பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டனர்.
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகின்றன. 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேரத்தில் இரட்டை இலை சின்னம் பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது. அப்போது, இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் என்பது நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது’’ என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த டிச.4-ம் தேதி பிறப்பித்த ஒரு உத்தரவில், “சூர்யமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும், அப்போது பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும்” என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இருந்தது.
அதேபோல இரட்டை இலை சின்னம் தொடர்பாக வா.புகழேந்தி அளித்திருந்த மனுவை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சூர்யமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமி ஆகியோர் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாகவும், டிச.23-ல் நேரிலும் ஆஜராகி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்தது.
அதன்படி, பழனிசாமி தரப்பில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகமும், பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.ராஜலட்சுமியும் நேரில் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை மனுக்களாக அளித்துள்ளனர். சூர்யமூர்த்தி தரப்பில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுக்களை தனக்கு வழங்கினால் மட்டுமே அதற்கேற்ப பதிலளிக்க முடியும் என அவகாசம் கோரப்பட் டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறும்போது, ‘‘அதிமுகவில் உறுப்பினராகக்கூட இல்லாத சூர்யமூர்த்தி கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து எம்ஜிஆர் மக்கள் கட்சி சார்பில் போட்டியி்ட்டவர். எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பான அவருடைய மனுவை நிராகரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். வாதி, பிரதிவாதிகள் தங்களது தரப்பு ஆட்சேபங்களை வரும் டிச.30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதில் ஆட்சேபங்கள் இருந்தால் ஜன.13-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது” என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரான பி.ராஜலட்சுமி கூறும்போது, ‘‘2022 ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டவை அல்ல என்பதாலும் அதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதாலும் தற்போதும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் அவர்தான். எனவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம்” என்றார்.
தேர்தல் ஆணையத்தில் நேற்று தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரான வா.புகழேந்தி அளித்துள்ள மனுவில், ‘‘சாதாரண தொண்டன் கூட அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்ற வகையில்தான் அதிமுகவை 1972 அக்.17-ல் எம்ஜிஆர் துவக்கினார். ஆனால் அந்த அடிப்படை சட்ட விதிகளில் திருத்தம் செய்து பழனிசாமி தனக்கு சாதகமாக கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் சட்டவிரோதமானவை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நிலுவையில் உள்ள அசல் உரிமையியல் வழக்குகளில் தான் முடிவு செய்ய முடியும் எனக் கூறியுள்ளது.
ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கு ஒதுக்கியது தவறானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அந்த பதவிகள் தேர்தல் ஆணைய பதிவேட்டில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. எனவே சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும்வரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இதேபோல கே.சி.பழனிசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், தேர்தல் ஆணைய படிவங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் பழனிசாமி கையெழுத்திட அனுமதிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்து வரும் சூழலில் ஜன.13-ல் இந்த விவகாரத்துக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.