ஜெய்ப்பூர் விபத்துக்கு காரணமான எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர் உயிர் தப்பியிருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 20-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எல்பிஜி டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் டேங்கர் லாரியின் மூடி திறந்து காற்றில் எல்பிஜி காஸ் பரவியது. இதனால் சாலையின் இருபுறமும் சுமார் 40 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கர்னி சிங் ரத்தோர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். 23 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
விபத்துக்கு காரணமான எல்பிஜி காஸ் டேங்கர் லாரி ஓட்டுநர் உயிரிழந்துவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. தற்போது அவர் சிறு காயம்கூட இல்லாமல் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிர் தப்பிய எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர் ஜெய்வீர் சிங் உத்தர பிரதேசத்தின் மதுராவை சேர்ந்தவர். அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: கடந்த 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஜெய்ப்பூரின் டிபிஎஸ் பள்ளி அருகே டேங்கர் லாரியை யு டர்ன் செய்து திருப்பினேன். அப்போது எதிரே துணிகளை ஏற்றி வந்த சரக்கு லாரி எனது லாரி மீது பின்பக்கமாக மோதியது. இதில் எனது லாரியின் மூடி திறந்து எல்பிஜி காஸ் காற்றில் பரவியது.
சிறு உராய்வு ஏற்பட்டால்கூட மிகப்பெரிய தீ விபத்து ஏற்படும் என்பதை உணர்ந்தேன். நான் மட்டுமே டேங்கர் லாரியை ஓட்டி வந்தேன். உடன் யாரும் வரவில்லை. எனவே செல்போனை எடுத்து கொண்டு ஜெய்ப்பூரை நோக்கி ஓடினேன். ஓடும்போதே லாரியின் உரிமையாளர் அனில் குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தேன். சுமார் 200 மீட்டர் தொலைவு ஓடியபோது எனது லாரி தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன். அடுத்தடுத்து பல்வேறு வாகனங்கள் தீப்பிடித்தன. நான் வேகமாக ஓடி உயிர் தப்பினேன். இவ்வாறு ஓட்டுநர் ஜெய்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த ஜெய்ப்பூர் காவல் துறை மூத்த அதிகாரி பக்ரு ஹேமேந்திர குமார் சர்மா கூறியதாவது: எல்பிஜி டேங்கர் லாரியின் ஓட்டுநர் ஜெய்வீர் சிங்குக்கு சிறு காயம்கூட ஏற்படவில்லை. அவரது லாரியின் மீது மோதிய சரக்கு லாரி ஓட்டுநர் உயிரிழந்துவிட்டார். விபத்து நேரிட்டபோது சம்பவ இடத்தில் 9 வாகனங்கள் இருந்துள்ளன. அனைத்து வாகனங்களும் தீப்பிடித்து ஓட்டுநர்கள் உயிரிழந்துவிட்டனர்.
எல்பிஜி டேங்கர் லாரி ஓட்டுநர் ஜெய்வீர் சிங் மட்டுமே பாதுகாப்பான தொலைவுக்கு ஓடி உயிர் தப்பி உள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டேங்கர் லாரியின் உரிமையாளர் அனில் குமார் டெல்லியில் இருக்கிறார்.
பொதுவாக மோசமான விபத்துகளில்கூட டேங்கர் லாரிகளின் மூடிகள் திறக்காது. ஆனால் ஜெய்ப்பூர் விபத்தில் டேங்கர் லாரியின் மூடி திறந்து எல்பிஜி காஸ் காற்றில் பரவியிருக்கிறது. இதுவே அதிக உயிரிழப்புக்கு காரணமாகிவிட்டது.
எனவே டேங்கர் லாரியின் உறுதித்தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். லாரி உரிமையாளர் அனில் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது, உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு காவல் மூத்த அதிகாரி பக்ரு ஹேமேந்திர குமார் சர்மா தெரிவித்துள்ளார்.