சென்னை: தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தும்போது, தேர்தல் நடத்தை விதி பிரிவு 93 (2)-ல் மாற்றம் செய்து வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திரித்து பேசுகின்றனர். இதுவரை அப்படி வழங்கப்பட்டதில்லை. இந்த திருத்தம் மூலம் அச்சமின்றி வாக்களிக்க முடியும்.
மேலும் 5, 8 வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி வழங்கப்படமாட்டாது என்பதற்கு தமிழக அரசு விரோதத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மத்திய அரசை பொருத்தவரை கல்வி தரமாக வழங்கப்பட வேண்டும். என்சிஆர்டி, ஏசர் உள்ளிட்ட தரவுகளின்படி இதர தென்மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கியிருக்கிறது. இதில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
பிரதமர் மோடிக்கும், முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆருக்கும் இடையேயான ஒற்றுமை குறித்த எனது அறிக்கைக்கு அதிமுக தலைவர்களே தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதால் வேறு புதிய பிரச்சினையை கிளப்ப வேண்டாம் என ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு மதவாத சாயம் பூசும் திராவிட கட்சிகள் இதை ஏன் வரவேற்கவில்லை.
இது திமுகவுக்கு மைனாரிட்டி சீசன். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறுபான்மையினருக்கு செய்தது என்ன என்பது தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிடப்படும். இதைவிட அதிகமாக தமிழகத்தில் செய்திருக்கிறோம் என முதல்வர் நிரூபிக்கட்டும். சாதிவாரி கணக்கை எடுத்து பகிர்ந்து கொடுப்பதை விடுத்து, சமுதாயத்துக்கு இடையே அடித்துக் கொள்ளும் சூழலை திமுக உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே மும்மொழிக் கொள்கை தான் இருந்திருக்கிறது. பிஎம்ஸ்ரீ பள்ளியை பெற்றுக் கொண்டு மூன்றாவது மொழியை தமிழக அரசு நிர்ணயித்திருக்க வேண்டும். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி உட்பட கொங்கு பகுதியில் இருக்கும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவினர்தான். நான் இதுவரை வருமானவரித் துறைக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. பாஜக உட்கட்சி தேர்தல் பணிகள் ஜனவரி இறுதிக்குள் முடிவடையும்.
பெரியாரின் ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. அம்பேத்கரின் கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என திருமாவளவன் போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.