மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும் `ஆல் பாஸ்’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த அந்த நடைமுறை கல்வி இடைநிற்றலை குறைக்கும் என்று ஒருசேர ஆதரவுக் குரல்கள் எழுந்த அதே நேரத்தில், மாணவர்களின் கல்வித்தரம் குறைகிறது என்று எதிர்ப்புக் குரல்களும் ஆங்காங்கே எழுந்தன. அதையடுத்து பள்ளிகளில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற `ஆல் பாஸ்’ முறையை ரத்து செய்து நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது மத்திய அரசு.
மேலும் `தேர்வில் தோல்வி அடைந்தால் இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பிலே தொடர்வார்கள்’ என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேசமயம் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து அரசுப் பள்ளிகளும் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவு புதுச்சேரியிலும் பின்பற்றப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாணவர்களின் கல்வித் தரத்தை கருத்தில் கொண்டுதான் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் `ஆல் பாஸ்’ முறையை ரத்து செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் புதுச்சேரி இருக்கிறது. எனவே, மத்திய அரசு எந்த உத்தரவை பிறப்பித்தாலும் புதுச்சேரி அரசு அந்த உத்தரவை செயல்படுத்தும். அதனடிப்படையில் இனி 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு `ஆல் பாஸ்’ வழங்கும் முறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தனி கல்வி வாரியமும், பாடத்திட்டமும் வைத்திருக்கிறார்கள். அந்தந்த அரசுகளுக்கு என்று கொள்கை முடிவுகள் இருக்கின்றன.
நாம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் இருப்பதால், மத்திய கல்வி திட்டத்தின் கீழ் எந்த மாற்றம் கொண்டுவந்தாலும், அது புதுச்சேரிக்கும் பொருந்தும். எனவே, மத்திய அரசு உத்தரவில் கூறப்பட்டிருக்கும் நடைமுறையை புதுச்சேரி கல்வித்துறை பின்பற்றும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கல்வித்துறையின் உத்தரவை பின்பற்ற வேண்டும். இதனால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்காது. மாணவர்களின் கல்வித் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும், அவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் நோக்கம். அதற்காகவே மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதனால் இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.