‘‘பொய் வழக்கில் டெல்லி முதல்வர் அதிஷி கைது செய்யப்படலாம்’’: அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அதிஷியை போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி முதல்வர் அதிஷியுடன், கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஆதாரப்பூர்வமான தகவலின்படி, சமீபத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளுக்கு இடையே சந்திப்பு நடந்துள்ளது. முதல்வர் அதிஷி-யை ஏதாவது பொய்யான வழக்கில் கைது செய்யும் படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் பாஜகவுக்கு எந்தவிதமான வேலையும் இல்லை. அரவிந்த் கேஜ்ரிவாலை விமர்சித்தும் அவதூறு பரப்பியும் தான் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ அது செய்திருக்கும் நலத்திட்டங்களை கூறி நேர்மையாக பிரச்சாரம் செய்கிறது. நாங்கள் பெண்களுக்கு மாதம்தோறும் நிதி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவத் திட்டம் ஆகியவற்றை அறிவித்திருக்கிறோம். இந்தத் திட்டங்களால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தத் திட்டங்களுக்காக டெல்லி அமைச்சரவை ஏற்கனவே ரூ.1,000 உதவித்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் நான் உயிருடன் இருக்கும் வரை பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தை நிறுத்த விட மாட்டேன்”. என்று தெரிவித்தார்.

அரசியலமைப்பு மீது நம்பிக்கையுள்ளது: அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் நலத்திட்ட பதிவுகள் குறித்தும் டெல்லி அரசுத்துறையின் நோட்டீஸ் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், “இன்று நாளிதழ்களில் வெளிடப்பட்டிருக்கும் அறிவிப்பு தவறானதாகும். பாஜக சில அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து இந்த விளம்பரத்தை கொடுத்துள்ளது. அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் பெண்களுக்கு மரியாதை திட்டம் (முதல்வரின் மகிளா சம்மான் யோஜனா) டெல்லி அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் செய்தி பொதுவெளியில் உள்ளது.

டெல்லியில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண சேவைத் திட்டத்தினை நிறுத்த என்மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்ய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்ததாக கேஜ்ரிவால் கூறினார். அவர்கள் என்னை கைது செய்தாலும், எனக்கு சட்ட அமைப்பு மீதும், அரசியலமைப்பு மீதும் நம்பிக்கை உள்ளது. எனக்கு ஜாமீன் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார். டெல்லி பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்துக்கு மத்தியில் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

நிலத்திட்டங்களுக்கு எதிராக நோட்டீஸ்: முன்னதாக ஆம் ஆத்மியின் நலதிட்ட அறிவிப்புக்கு எதிராக டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் வளர்ச்சித்துறை புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘முதல்வரின் பெண்களுக்கான மரியாதை திட்டம்’ (முக்கிய மந்திரி மகிளா சம்மான் யோஜனா) என்ற பெயரில் தகவல்களை சேகரிப்பது மோசடி என்றும், இவ்வாறு தகவல்களை திரட்ட தனிநபர்களுக்கோ, அரசியல் கட்சிக்கோ அதிகாரம் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘முதல்வரின் பெண்களுக்கான மரியாதை திட்டம்’ என்ற பெயரில் டெல்லி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,100 வழங்குவதாக ஒரு அரசியல் கட்சி அறிவித்துள்ளதாக ஊடக செய்திகளின் வழியாக அறிந்தோம். டெல்லி அரசால் அத்தகைய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

அத்தகைய திட்டம் எதுவும் இல்லாததால், இல்லாத அந்த திட்டத்துக்கான படிவங்கள் மற்றும் விண்ணப்பங்களை ஏற்றுகொள்வது பற்றி கேள்வி எழுப்ப முடியாது என்று வலியுறுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மோசடி செய்யப்படுகிறது. ‘முதல்வரின் பெண்களுக்கான மரியாதை திட்டம்’ என்ற பெயரில் தகவல்களை திரட்ட தனிநபர்களுக்கோ, அரசியல் கட்சிக்கோ அதிகாரம் இல்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.