ராஜஸ்தானில் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழந்த 3-வது சிறுமியை மீட்கும் பணி நேற்று 3-வது நாளாக நீடித்தது.
ராஜஸ்தானின் கோட்புட்லி-பெஹ்ரார் மாவட்டம் கிராத்பூர் என்ற கிராமத்தில் செட்னா என்ற 3 வயது சிறுமி தனது தந்தையின் நிலத்தில் கடந்த திங்கட்கிழமை மதியம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். முதலில் 15 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுமியை மீட்க குடும்பத்தினரே முயன்றனர். இதில் அக்குழந்தை ஆழத்துக்கு சென்றுவிட்டது.
தகவலின் பேரில் ஜெய்ப்பூரில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அடுத்த சில மணி நேரத்தில் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்புக் குழுவினர் 10 அடி நீள இரும்பு குழாயுடன் இணைக்கப்பட்ட ஊக்கு மூலம் சிறுமியை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் சுரங்கம் தோண்டி வருகின்றனர். அதேவேளையில் மற்றொரு உள்ளூர் சாதனம் மூலம் சிறுமியை மீட்க முயன்று வருகின்றனர்.
சிறுமிக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. கேமரா மூலம் அதன் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. அங்கு மீட்புப் பணி நேற்று மூன்றாவது நாளாக நீடித்தது.
முன்னதாக ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 56 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்நிலையில் 15 நாட்களில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.