சிஎஸ்கே அணியில் உள்ள 3 முக்கிய பிரச்சனைகள்! என்ன செய்ய போகிறார் தோனி?

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். இதுவரை தோனியின் தலைமையில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். கடந்த ஆண்டு தோனி தனது கேப்டன்சி பதவியை ருதுராஜ் கைகுவாட்டிடம் கொடுத்தார். அவரது தலைமையில் கடந்த சீசனில் சென்னை அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற தவறியது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு பலமான அணியை எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். வழக்கமாக சென்னை அணி ஏலத்தில் மூத்த வீரர்களை தேர்வு செய்து வந்த நிலையில் இந்த முறை அதிகமாக இளம் வீரர்களை வாங்கியுள்ளனர். இது சென்னை அணியின் மீது ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 சீசனில் 3 விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி

ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். கடந்த இரண்டு சீசங்களாக கடைசி ஒரு ஓவர் அல்லது இரண்டு ஓர்களுக்கு மட்டுமே தோனி பேட்டிங் செய்ய வருகிறார். தோனியை தவிர்த்து சென்னை அணியில் எந்த ஒரு விக்கெட் கீப்பரும் இல்லை. ஏலத்திலும் இஷான் கிசன், கேஎல் ராகுல் போன்ற வீரர்களை எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில், தோனிக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டாலோ அல்லது வேறு சில காரணங்களால் விளையாட முடியாமல் போனாலோ தோனியின் இடத்தை நிரப்பக்கூடிய ஒரு வீரர் சென்னையில் இல்லை. ஏற்கனவே தோனிக்கு முழங்காலில் காயம் உள்ளது, அவரால் ரன்கள் ஓடி எடுக்க முடியாது. இது முக்கியமான கட்டத்தில் சென்னை அணிக்கு பிரச்சினையாக மாறலாம்

ஃபினிஷர் இல்லை

மற்ற அணிகளை போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு தரமான ஃபினிஷர் இல்லை. இத்தனை ஆண்டுகளாக தோனி இதனை செய்து வந்த நிலையில் இனியும் தோனியை அதை செய்வாரா என்பது சந்தேகமே. ஜடேஜா இருந்தாலும் அவர் அனைத்து போட்டிகளையும் முடித்துக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பை அவர் மீது வைக்க முடியாது. எனவே இந்த அழுத்தங்கள் அனைத்தும் சிவம் துபேவின் மீது விழலாம். இது அவரது பேட்டிங்கையும் பெரிதாக பாதிக்கும்.

மதீஷ பத்திரனவைத் தவிர டெத் பவுலர் இல்லை

மதீஷ பத்திரன சந்தேகத்திற்கு இடமின்றி ஐபிஎல்லில் சிறந்த டெத் பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளது. ஆனால் அவர் காயம் அடைந்தாலோ அல்லது இலங்கை அணிக்காக சென்றாலோ அவரது இடத்தை நிரப்ப ஆட்கள் இல்லை. கடந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆப் போகாததற்கு பத்திரனா இல்லாததும் ஒரு காரணம் என்று சொல்லலாம். சென்னை அணியில் கலீல் அகமது மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். அவர்கள் இருவரையும் டெத் பவுலர்களாக கணக்கில் எடுத்து கொள்ள முடியாது. நாதன் எல்லிஸ் ஒரு பேக்கப்பாக இருக்கிறார் என்றாலும், பத்திரனா இல்லை என்றால் அணிக்கு பலவீனமான பகுதியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.