சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன், போலீஸிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது, கை காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக, பாஜக கட்சியினர் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு 7.45 மணி அளவில் அதே கல்லூரியில் படிக்கும் நெருங்கிய நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் பின்புறம் உள்ள தூண் அருகே நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
மறைவான இடத்தில் இருந்து இவர்களை நோட்டமிட்ட ஞானசேகரன் என்ற இளைஞர், அவர்கள் நெருக்கமாக இருப்பதை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அவர்களிடம் சென்று, வீடியோ காட்சியை பல்கலைக்கழக டீன் மற்றும் ஊழியர்களிடம் காட்டப்போவதாகவும், கல்லூரியைவிட்டு அவர்களை நீக்கச் செய்வதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
வீடியோ காட்சியை அழித்துவிடுமாறு அவர்கள் கெஞ்சியதை கண்டுகொள்ளாத இளைஞர், அந்த மாணவரை அங்கிருந்து விரட்டியுள்ளார். பின்னர், மாணவியை மிரட்டி இருள் சூழ்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்ற இளைஞர், வீடியோவை மாணவியின் பெற்றோர், டீன் உள்ளிட்டோரிடம் காண்பித்துவிடுவதாக மீண்டும் மிரட்டியுள்ளார். தன்னிடமும், இன்னொருவரிடமும் தனிமையில் இருக்குமாறும் கூறி அச்சுறுத்தி உள்ளார். பின்னர், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் அதையும் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
மாணவியின் அடையாள அட்டையையும் போட்டோ எடுத்ததுடன், அவரது தந்தையின் செல்போன் எண்ணையும் மிரட்டி வாங்கியுள்ளார். 2 நாள் கழித்து மீண்டும் வருவதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளார். கண்ணீருடன் அறைக்கு திரும்பிய மாணவி இதுகுறித்து சக தோழிகளிடம் கூறி அழுதுள்ளார். வெளியூரில் உள்ள பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தோழிகள் தைரியம் கூறிய நிலையில், மறுநாள் (டிச.24) காலை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ‘பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர் கருப்பு சட்டை, கிரே ஜீன்ஸ் பேன்ட், கருப்பு தொப்பி அணிந்திருந்தார். பார்த்தால் அடையாளம் காட்ட முடியும்’ என்று மாணவி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக விடுதி மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நடைபாதையில் பிரியாணி கடை நடத்தும் ஞானசேகரனிடமும் விசாரித்துள்ளனர். ஆனால், தன்னிடம் இருந்த வீடியோ ஃபைல்களை அழித்த அவர், அதுபற்றி எதுவும் தெரியாது என்று கூறி நழுவியுள்ளார்.
செல்போன் அழைப்புகள், சிசிடிவி கேமரா பதிவுகள் உட்பட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், குற்றச்செயலில் ஈடுபட்டது ஞானசேகரன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்ய போலீஸார் விரைந்தனர். போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதில், அவரது இடது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மாணவியை மிரட்டியபோது, இன்னொருவருடனும் தனிமையில் இருக்குமாறு ஞானசேகரன் கூறியதால், இந்த விவகாரத்தில் அவருக்கு தெரிந்த வேறு யாரோ ஒரு முக்கிய பிரமுகருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால், ‘மாணவியின் கவனத்தை திசைதிருப்பவே அவர் இவ்வாறு கூறினார். சைபர் கிரைம் போலீஸார் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரன் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை’ என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எப்ஐஆர் வெளியானதால் அதிர்ச்சி: இதற்கிடையே, மாணவி வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. மாணவியின் பெயர், வயது, முகவரி, செல்போன் எண் உட்பட அனைத்து தகவல்களும் வெளியானது. மாணவி எவ்வாறு துன்புறுத்தலுக்கு ஆளானார் என்பதும் அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வன்கொடுமை வழக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய எஃப்ஐஆர், பொது வெளியில் எப்படி கசிந்தது என்ற கேள்வி எழுந்தது.
சிறுவர், சிறுமிகள் மீதான அத்துமீறல்கள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் போன்ற முக்கிய குற்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களில் ரகசியம் காக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுபோல பெயர் வெளியானால், இதேபோல பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு அச்ச உணர்வு ஏற்படும். புகார் கொடுக்க தயங்குவார்கள். அடுத்தடுத்து இதேபோன்ற புகார்கள் வருவதை தடுப்பதற்காகவே காவல் துறையில் மறைமுகமாக இவ்வாறு சதி நடந்ததா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.
‘எஃப்ஐஆர் வெளியானது துரதிர்ஷ்டவசமானது. இதில் தொடர்பு உடையவர்கள், சமூக வலைதளங்களில் பரப்புவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீஸார் கூறினர்.
190 ஏக்கர் பரப்பு கொண்ட அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுற்றிலும் உயரமான சுற்றுச்சுவர் உள்ளது. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. ரோந்து போலீஸாரும் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இவற்றை மீறி வன்கொடுமை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் தற்போது பாதுகாப்பு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று தகவல் பரவிய நிலையில், அமைச்சர் ரகுபதி, கோவி. செழியன் ஆகியோர் அதை திட்டவட்டமாக மறுத்தனர். ஆனால், அவர் திமுக நிர்வாகிதான் என்று அதிமுக ஐ.டி. பிரிவு தலைவர் கோவை சத்யன் தெரிவித்துள்ளார். ‘‘கைதான ஞானசேகரன், திமுக சைதாப்பேட்டை கிழக்கு மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பது ஊரறிந்த விஷயம். வேக வேகமாக அவரது சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் 2-க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் பற்றிய விவரங்களை காவல் துறை ஏன் வெளியிடவில்லை. அவர் வட்டச் செயலாளர் என்ற பொறுப்பில் இருப்பதாகவும் செய்தி வருகிறதே. திடீரென சிசிடிவி வேலை செய்யவில்லை என்று கூறுவது யாரை காப்பாற்றுவதற்காக’ என்று பல கேள்விகளை எழுப்பி எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். சில கட்சி நிகழ்ச்சிகள், அழைப்பிதழில் ஞானசேகரன் பெயர் இருப்பது போன்ற சில புகைப்படங்களையும் கோவை சத்யன் பகிர்ந்துள்ளார்.