புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி, நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், “மன்மோகன் சிங் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூச்சுத்திணறல் காரணமாக நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தங்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னார் வீடியோவில் பேசிய பிரதமர் மோடி, “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு நம் அனைவரையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மன்மோகன் சிங் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு ஆகும். அவரது வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாகும். நாம் எவ்வாறு போராட்டங்களை தாண்டி, உயர முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
அவர் எப்போதும் ஒரு நேர்மையான மனிதராக, சிறந்த பொருளாதார நிபுணராக நினைவுகூரப்படுவார். ஒரு பொருளாதார நிபுணராக, அவர் நாட்டுக்கு பல்வேறு சேவைகளை வழங்கினார். சவாலான நேரத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றினார். பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்த நாட்டிற்கு பொருளாதாரத்தில் ஒரு புதிய திசையை உருவாக்கிக் கொடுத்தார்.
முக்கியமான சந்தர்ப்பங்களில் எல்லாம், அவர் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வந்து ஒரு எம்.பி.யாக தனது கடமையைச் செய்தார். அவர் எப்போதும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடனும் தனது நல்லுறவைப் பேணி வந்தார். நான் முதல்வராக இருந்தபோது, அவருடன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்திருக்கிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமக்கள் சார்பாகவும், டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.” என்றார்.