ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் வரிசைகனி (65). இவருக்கு நேற்று நள்ளிரவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து த.மு.மு.க அமைப்பினை சேர்ந்த ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வரிசைகனியை ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த ஆம்புலன்ஸ் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாலாந்தரவை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து டீசல் நிரப்பிவிட்டு வெளியே வந்த விறகு ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் திடீரென மோதியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். இந்நிலையில் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்குச் சென்ற நோயாளி வரிசைகனி மற்றும் அவருடன் சென்ற சகுபர் சாதிக் (47), அனீஸ் பாத்திமா (40) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஆம்புலன்ஸில் பயணித்த ஹர்ஷத், கதீஜா ராணி, ஆயிஷா பேகம் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் ஷர்ஷத் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ராமநாதபுரம், கேணிக்கரை போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.