ராஜஸ்தான்,
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3-வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை, கடந்த டிச.23-ம் தேதி அன்று கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய நிலத்திலுள்ள 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 120 வது அடியில் சிக்கி இருந்த குழந்தையை மீட்க மீட்புப் படையினர் போராடி வந்தனர்.
குழந்தை விழுந்த அந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே 160 அடி ஆழத்திற்கு ஒரு மிகப்பெரிய குழித்தோண்டப்பட்டு அந்த குழந்தைக்கு நேராக 8 அடிக்கு ஒரு சுரங்கம் தோண்டும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
நிலத்துக்கு கீழே கடினமான பாறைகளை துளைக்கும் சவாலான பணிகளை மேற்கொண்ட மீட்புப்படையினர், குழந்தையை மீட்கும் பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டிருந்தனர். இந்த மீட்புப்பணி 10-வது நாளாக இன்றும் (ஜன. 1) நீடித்து வந்தது.
இந்த நிலையில், அந்த குழந்தை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து இன்று மாலை வெளியே மீட்கப்பட்டநிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அந்த குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபின், அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அயராது உழைத்த நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுக்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு அந்த குழந்தையின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் ஏற்படாமல் இருக்க, திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தினர்..