சென்னை: நீதிமன்றங்களில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்களில் அரசு வழக்கறிஞர்களிடம் சான்றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலர் என்.முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு பிறப்பித்த சுற்றறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள் மற்றும் வழக்குக்கு தேவையான பிற ஆவணங்களில் சென்னை உயர் நீதிமன்ற ரிட் விதி 9-ன் பிரகாரம் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அல்லது நோட்டரி மற்றும் சான்று உறுதி ஆணையர்கள் மூலமாக சான்றொப்பம் பெற வேண்டும்.
ஆனால் அரசு சார்ந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்களில் வழக்குகளில் எதிர்மனுதாரர்களாக இருக்கும் அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுமே சான்றொப்பம் செய்து தாக்கல் செய்யும் நடைமுறை நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் தலைமையிலான அமர்வு, அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களிலும் ரிட் விதி 9-ன் பிரகாரம் தேவையான சான்றொப்பம் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மாநில அரசு ப்ளீடர் வாயிலாக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
எனவே இனி உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குகளில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம், பதில் மனுக்கள், வழக்குத் தொடர்பான ஆவணங்களில் அரசு வழக்கறிஞர்களிடமே சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பமிடும் அரசு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக இருக்கக் கூடாது. மேலும் சான்றொப்பமிடும் அரசு வழக்கறிஞர்கள் தங்களது கையெழுத்துடன், அவர்களது பெயர், முத்திரை, பதிவு எண், பதிவு செய்துள்ள பார் கவுன்சில், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
எனவே இதற்கு தேவையான ஏற்பாடுகளை உயர் நீதிமன்ற மாநில அரசு ப்ளீடர், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.