ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீ விபத்து: நோயாளிகள்  வேறு தளத்துக்கு மாற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை ஏற்பட்டு நோயாளிகள் உடனடியாக வேறு தளத்துக்கு மாற்றப்பட்டனர். துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடம் ஐந்து தளங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறையில் திடீரென தீப்பற்றி புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் இரண்டாவது தளம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதில் ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. புகை மூட்டம் ஏற்பட்டதால் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்துள்ளனர். இதனால் புதிய மருத்துவமனை கட்டிடம் இருளில் மூழ்கியது.

உடனடியாக மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் டார்ச் லைட் மற்றும் அவசர விளக்குகளை பயன்படுத்தி, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தளத்தில் இருந்த நோயாளிகளை அவசரமாக முதல் தளத்துக்கு மாற்றினர். இதில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த ஒரு சில நோயாளிகள் முதல் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற நோயாளிகள் பழைய மருத்துவமனை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர். நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், இன்வெர்ட்டர் அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் தீயணைப்புத்துறையினர் தீ விபத்து ஏற்பட்ட இன்வெர்ட்டர் அறையில் தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆட்சியர் ஆய்வு: விபத்து நடந்ததும் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஆகியோர், துரித மீட்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டனர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்டர் அறை மற்றும் நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ள அறைகளை பார்வையிட்டு, நோயாளிகளின் உறவினர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், “மின்சார அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தானியங்கி தீவிபத்து கருவிகள் செயல்பட்டதால் உடனடியாக தீவிபத்து தெரிய வந்தது. எஸ்பி மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்தனர். இரண்டாவது தளத்தில் இரண்டு அறைகளில் மட்டும் புகை அதிகமாக இருந்தது.

உடனடியாக இரண்டு முதல் நான்கு தளங்களில் இருந்த இரண்டு அவசர சிகிச்சை நோயாளி உள்ளிட்ட 50 நோயாளிகள் உடனடியாக முதல்தளத்துக்கும், வேறு கட்டிடத்துக்கும் மாற்றப்பட்டனர். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. கட்டிடம் முழுவதும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா? என சோதனை செய்து, தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.