புதுடெல்லி: டெல்லி மாடல் டவுண்ஸ் கல்யாண் விகார் பகுதியில் வசித்தவர் புனித் குரானா. இவருக்கு வயது 40. இவருடைய மனைவி மனிகா ஜகதீஷ் பாவா. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் சேர்ந்து டெல்லியில், ‘உட்பாக்ஸ் கபே’ என்ற பெயரில் ஓட்டல் ஒன்று தொடங்கினர். இதற்கிடையில், இருவருக்கும் இடையில் வியாபாரம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் முற்றி உள்ளது.
இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், கல்யாண் விகார் பகுதியில் உள்ள வீட்டின் அறையில் புனித் குரானா நேற்றுமுன்தினம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீஸார், புனித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், புனித் மற்றும் மனிகா இருவரும் தொலைபேசியில் பேசும் உரையாடலை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட புனித் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
அதில், “எங்களை சித்ரவதை செய்தவர்களுக்கு ஆதரவாகத்தான் இந்த சட்ட நடைமுறைகள் உள்ளன. இப்போது நான் போகிறேன். இனிமேல் எந்த பணப் பிரச்சினையும் இருக்காது. அதேபோல் எனது வயதான பெற்றோர், சகோதரனை இனிமேலும் சித்ரவதை செய்வதற்கு எந்த காரணமும் இருக்காது. நான் என் உடலை அழித்து கொள்ளலாம். அப்படி செய்வதால் நான் நம்பும் அனைத்தையும் இந்த முடிவு பாதுகாக்கும்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து மனிகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.