புதுடெல்லி: சீனாவில் பரவி வரும் வைரஸ் காரணமாக அங்கு சூழல் அசாதாரணமானதாக இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தற்போது பரவி வரும் காய்ச்சல் அடிப்படையில் சீனாவில் சூழல் அசாதாரணமானதாக இல்லை. தற்போதைய பரவலுக்கான காரணம் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், ஆர்எஸ்வி மற்றும் HMPV. இவை வழக்கமான நோய்க்கிருமிகள் தான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் கொண்டு நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும் சீனாவின் நிலைமை குறித்த சரியான நேரத்தில் தகவல்களை பகிருமாறு உலக சுகாதார நிறுவனத்திடமும் கோரப்பட்டுள்ளது. இந்த வைரஸ்கள் ஏற்கனவே இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ளவைதான்.
ஐசிஎம்ஆர் மற்றும் ஐடிஎஸ்பி நெட்வொர்க்குகள் மூலம் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச பிரச்சினை (எஸ்ஏஆர்ஐ) ஆகியவற்றுக்கான வலுவான கண்காணிப்பு அமைப்பு ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இவற்றில் அசாதாரண அதிகரிப்பு எதுவும் இதுவரை இல்லை.
கடந்த சில வாரங்களில் எதிர்பார்க்கப்படும் பருவகால மாறுபாட்டைத் தவிர, சுவாச நோய் பாதிப்புகள் எதுவும் இல்லை என்பதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆயத்த பயிற்சியின் தரவுகள், சுவாச நோய்களின் அதிகரிப்பை சமாளிக்க நாடு நன்கு தயாராக இருப்பதாக காட்டுகிறது” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எச்எம்பி வைரஸ் என்றால் என்ன? – இதை மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சாதாரண சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் போன்றது எனலாம். சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் இது. இந்த வகை வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவும். வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருட்கள், புழங்கிய இடங்களில் இருந்து இன்னொருவருக்குப் பரவும்.
தொற்று ஏற்பட்ட நபருடன் கை குலுக்கிவிட்டு கையை கண்கள், மூக்கு, வாயில் வைத்தல், அவர் தும்மும் போதோ இருமும் போதோ அருகில் இருத்தல் போன்றவற்றாலும் தொற்று பரவும். கரோனா பரவலுக்கும் இதே காரணம் தான் சொல்லப்பட்டது என நீங்கள் யோசிக்கலாம். எல்லா ஃபோமைட் போர்ன் (fomite borne) அதாவது வைரஸ் பாதித்தவர் தொட்டதால் உயிரற்ற பொருட்களின் மீது வைரஸ் ஒட்டி அதன்மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவுதல் ஒரே பாணியில் தான் நடைபெறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
கரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா என்ற தகவல் ஏதும் இல்லை. புதிய வைரஸால் சிறார் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது என்று கேட்டபோது, இதுபோன்ற வைரஸ்கள் சிறார், முதியவர் என்றில்லை யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அவர்களை எளிதாக, அதிகமாக தாக்கும் என்றார்.