ICC World Test Championship Final 2025: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதத்தில், இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த 2023-25 சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் WTC புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க கடுமையாக போராடின.
அந்த வகையில் சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக WTC பைனலுக்கு தகுதி பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று ஆஸ்திரேலியாவும் தனது இறுதிபோட்டிக்கான இடத்தை உறுதிசெய்துவிட்டது.
WTC பைனல்: தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
இந்திய அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் 3-0 என்ற கணக்கில் வைட் வாஷ் ஆனது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த தொடரில் இரண்டு போட்டிகளை வென்றிருந்தால் கூட இந்திய அணி தற்போது WTC பைனலுக்கு தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால் பல்வேறு பொன்னான வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டுவிட்டது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி WTC பைனலில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும். அப்படி இருக்க, தனது நீண்ட கால காத்திருப்பான ஐசிசி கோப்பையை தென்னாப்பிரிக்க அணி ருசிக்குமா அல்லது ஆஸ்திரேலியா அணியே இரண்டாவது முறையாக WTC கோப்பையை தட்டி தூக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேஜிக் நடக்குமா?
இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலிய அணி தற்போது இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலும் சரி, தோற்றாலும் சரி WTC பைனலில் ஆஸ்திரேலியா விளையாடும் என்பதுதான் பலரும் கூறிவரும் தகவலாகும். ஆனால் இலங்கை தொடரில் இந்த ஒரு மேஜிக் நடந்தால் ஆஸ்திரேலியாவால் WTC பைனலுக்கு போக முடியாது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
புள்ளிகள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் சதவீதம் 63.73 ஆக உள்ளது. ஒருவேளை, இலங்கை இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் ஜெயித்தால் ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் சதவீதம் 57.02 ஆக குறையும். ஆனால், இலங்கை அணியின் புள்ளிகள் சதவீதம் 53.85 ஆக தான் இருக்கும்.
ஆஸ்திரேலியா மெதுவாக பந்துவீசுமா?
மாறாக, இலங்கை 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று, ஆஸ்திரேலியா மெதுவாக ஓவர் வீசி அதற்காக தண்டனையாக 8 புள்ளிகள் குறைக்கப்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலியா WTC பைனலுக்கு போகும் வாய்ப்பை பறிகொடுக்கும். மேலும், அந்த இடத்தில் இந்தியா வராது. இலங்கை அணியே இறுதிப்போட்டிக்கு வரும் என்பதும் கவனிக்கத்தக்கது.
இலங்கை சுழற்பந்துவீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா மெதுவாக பந்துவீசுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. முன்னதாக கடந்த ஆஷஸ் தொடரில், நான்காவது போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் ஆஸ்திரேலியாவிடம் இருந்து 10 புள்ளிகள் பறிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது. அந்த 5 போட்டிகள் கொண்ட 2023 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மொத்தம் 19 புள்ளிகளை பறிகொடுத்ததும் நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு? கவுதம் கம்பீர் சொன்ன தகவல்!